மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை பேருந்து சேவையை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த முன்முயற்சியானது, நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் நடமாடும் உரிமைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் (PMD) படி, ‘‘அனைவருக்கும் சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் மற்றும் மனித கண்ணியத்தைப் பாதுகாக்கும் நாடு’’ என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக மொத்தம் 430.7 மில்லியன் ரூபாய் நிதிய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் PMD தெரிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்து அமைப்பிலுள்ள பௌதிகத் தடைகளை நீக்கி, மாற்றுத்திறனாளிகள் சுயாதீனமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கக்கூடிய ஆதரவான சூழலை உருவாக்கி, அவர்கள் சமூகத்தில் முழுமையாகப் பங்கேற்க அனுமதிப்பதே இந்த முன்முயற்சியின் பிரதான நோக்கமாகும்.
இத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்கள் எளிதில் அணுகக்கூடிய 10 நவீன குறைந்த-தள குளிரூட்டப்பட்ட பேருந்துகள் மார்ச் 10, 2026 அன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இந்தப் பேருந்துகள் மார்ச் 14ஆம் தேதி கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மெட்ரோ நிறுவனத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு பேருந்திலும் 33 இருக்கைகள் உள்ளன மற்றும் ஒரே நேரத்தில் 80 பயணிகள் வரை பயணிக்க முடியும். அதே நேரத்தில் சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
ஒரு முன்னோடித் திட்டமாக, மாகும்பூர பன்முகப் போக்குவரத்து மையத்தை மையமாகக் கொண்டு இந்தச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, மாகும்பூரவிலிருந்து புறக்கோட்டை மற்றும் மாகும்பூரவிலிருந்து கடவத்த வரையான வழித்தடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் 40 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் இயங்கும். மகாரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய சுகாதார நிறுவனங்களை நேரடியாக உள்ளடக்கும் வகையில் இந்த வழித்தடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன என்று PMD குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பேருந்து சேவையின் இயக்கத்திற்காக, இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) தேர்ந்தெடுக்கப்பட்ட 28 சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். சமூக சேவைகள் அமைச்சினால் வழங்கப்படும் இப்பயிற்சியில் பேருந்து தொழில்நுட்பம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு, தொழில்முறை நெறிமுறைகள் மற்றும் பயணிகளின் கவனிப்பு, அத்துடன் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு உதவுவதற்கான சைகை மொழித் தொடர்பு ஆகியவை அடங்கும்.
இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்களின் போக்குவரத்துத் தேவைகளை மேலும் பூர்த்தி செய்வதற்காக ஆகஸ்ட் மாதத்தில் மேலதிகமாக 100 பேருந்துகளை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முன்முயற்சிக்கு இணையாக, ‘சுத்தமான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்தின் மூலம் ஏற்கனவே உள்ள பேருந்து நிறுத்தங்களை புதுப்பிக்க அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற அணுகல் தரத்துடன் புதியவற்றை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் PMD மேலும் தெரிவித்துள்ளது.
