முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சிறையில் அடைப்பதற்குத் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் அநீதியான முயற்சி குறித்து சர்வதேச சமூகத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (23) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், இவ்விடயம் தொடர்பில் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரச்சாரமொன்றும் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
பின்னணி:
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் விஜயம் தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு, மார்ச் மாதத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் அண்மையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தெரிவித்திருந்த பின்னணியிலேயே ஹரின் பெர்னாண்டோ இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அரசாங்கம் தற்போது “திணறிக் கொண்டிருப்பதாக” குற்றஞ்சாட்டியதுடன், இந்தப் பிரச்சினையைத் தாம் கைவிடப் போவதில்லை என்றும் வலியுறுத்தினார்.
