Headlines

வெலிகம W15 ஹோட்டல் துப்பாக்கிச்சூடு: வெளிநாடு தப்பியோடிய முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கட்டுநாயக்கவில் கைது!

கொழும்பு, பிப். 24: 2023 ஆம் ஆண்டு வெலிகம, பெலேன பகுதியில் உள்ள W15 ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நிலையில் வெளிநாட்டிற்குத் தப்பியோடியிருந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் (IP) ஜகத் நிஷாந்த, மீண்டும் இலங்கை திரும்பிய போது நேற்று (23) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2023 டிசம்பர் 31 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) 8 முன்னாள் அதிகாரிகளைச் சந்தேகநபர்களாகப் பெயரிட்டு, அவர்களைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்த பின்னணியிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் பின்னணி:

பாதாள உலகக் குழுத் தலைவரான நதுன் சிந்தக விக்கிரமரத்ன என்றழைக்கப்படும் ‘ஹரக் கட்டா’வின் சகாக்கள் குழுவொன்றைக் கைது செய்யும் நோக்கில், 2023 டிசம்பர் 31 அன்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று சிவில் உடையில் வெலிகம பகுதிக்குச் சென்றிருந்தது.

இதன்போது, W15 ஹோட்டலுக்குள்ளிருந்து சிவில் உடையிலிருந்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதற்குப் பதிலடியாக அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வெலிகம பொலிஸ் நிலையத்தின் நடமாடும் ரோந்து வாகனத்திலிருந்த அதிகாரிகள், CCD அதிகாரிகள் வந்த வேனை குற்றவாளிகளின் வாகனம் எனத் தவறாகக் கருதி (தவறான புரிதல் காரணமாக), அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.

இச்சம்பவத்தினால் CCD அதிகாரிகள் வந்த வேன் அங்கிருந்து சென்ற போதிலும், அதற்குள் இருந்த இரண்டு CCD அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகினர். அவர்களில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 47 வயதான பொலிஸ் சார்ஜன்ட் உபுல் சாமிந்த குமார என்பவர் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *