Headlines

மழைக்காலத்தில் மீண்டும் தலைதூக்கும் டெங்கு : கொசு உற்பத்தியாகும் இடங்களை உடனடியாக அழிக்க அழைப்பு.

நாட்டில் தற்போது நிலவி வரும் மழைக்காலநிலை மற்றும் அதனால் உருவாகியுள்ள வெள்ளச் சூழல் காரணமாக டெங்கு கொசுக்கள் உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களைச் சுற்றி நீர் தேங்கும் இடங்களை உடனடியாகச் சுத்தப்படுத்தி, கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவசரமாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் டாக்டர் கபில கன்னங்கர இது குறித்து எச்சரிக்கையில், டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொள்ளத் தவறினால், எதிர்காலத்தில் மீண்டும் பெரிய அளவிலான டெங்கு பரவல் அலை உருவாகக்கூடும் எனத் தெரிவித்தார். வரலாற்று ரீதியாகவே மழைக்காலங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் போக்கைக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு முழுவதும் தீவிர ஆய்வு:

தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு கொசு லார்வாக்கள் தொடர்பான கள ஆய்வுகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருவதாகவும், தற்போது வரை எட்டப்பட்டுள்ள டெங்கு கட்டுப்பாட்டு நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளப் பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் டாக்டர் கன்னங்கர வலியுறுத்தினார்.

தென்மேற்கு பருவமழை காலத்தில் உருவான உயர் ஆபத்து மற்றும் தொற்றுநோய் சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியப் பங்கு வகித்ததை நினைவுகூர்ந்த அவர், அத்தகையதொரு ஆபத்தான நிலை மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து உடனடியாகச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, பொதுமக்கள் தங்களது வீடுகள், தோட்டங்கள், பாடசாலைகள் மற்றும் அலுவலகச் சூழலில் தண்ணீர் தேங்கக்கூடிய பாத்திரங்கள், சிரட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தித் தண்ணீர் தேங்குவதைத் தடுக்கத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனச் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *