Headlines

மேல், சப்ரகமுவ மாகாணங்களில் 100 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை அறிக்கை.

வங்காள விரிகுடாவின் அண்டமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, எதிர்வரும் நாட்களில் மேலும் வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வானிலை அமைப்பால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றாலும், அதனை நோக்கி வீசும் காற்றின் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை நிலைமை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். குறித்த பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வடமத்திய மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். அத்துடன், ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *