அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆரச்சியினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தில் அடங்கியுள்ள சரத்துக்கள் மக்களின் இறைமையையோ அல்லது நீதித்துறையின் சுதந்திரத்தையோ மீறவில்லை என மனுதாரர் வாதிடுகிறார்.
அதற்கமைய, குறித்த சட்டமூலத்திற்குப் பொது வாக்கெடுப்பு மூலம் அனுமதி பெறத் தேவையில்லை என்றும், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற நடைமுறையின் ஊடாக அதனை நிறைவேற்ற முடியும் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் வளர்ந்து வரும் சட்ட மற்றும் அரசியல் விவாதங்களுக்கு மத்தியிலேயே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த திருத்தத்திற்கு எதிராகக் குறைந்தது 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அதன் அரசியலமைப்புத் தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைத் தொடரத் தயாராக இருப்பதாகவும், பொது வாக்கெடுப்புத் தேவையென உச்ச நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு அறிவுறுத்தலையும் கடைப்பிடிக்கத் தயாராக இருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
