இன்று (07) காலை இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, சற்று முன்னர் கொழும்பு அளுத்கடை (Hulftsdorp) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, கிருலப்பனை பூர்வாராம வீதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார். அவரது இல்லத்தில் வைத்து சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்த பின்னரே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
‘சிரிளிய சவிய’ (Siriliya Saviya) நிதியத்துடன் தொடர்புடைய கணக்கொன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்குரிய கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி விபரம்:
சிகிச்சைக்காக கடந்த செப்டெம்பர் 16 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ, மலேசியாவிலிருந்து கடந்த திங்கட்கிழமை (05) இரவு இலங்கை திரும்பியிருந்தார். அவர் நாடு திரும்பியதும், எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர்.
முன்னதாக, ‘சிரிளிய சவிய’ அமைப்பின் நிதி விவகாரம் தொடர்பான விசாரணைகளில் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, அவரது சட்டத்தரணிகள் கடந்த திங்கட்கிழமை (05) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன் பிணை (Anticipatory Bail) மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வாறானதொரு பரபரப்பான பின்னணியில், இன்று காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அளுத்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
