அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தில் இடம்பெற்றுள்ள மதுவரிக் கட்டளைச் சட்டம் தொடர்பான அனைத்து குற்றங்களையும் நீக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தரப்பு உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
குறித்த சட்டமூலத்தின் சில ஏற்பாடுகளின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மையைச் சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (09) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, அறிவுசார் சொத்துரிமை மீறல்கள் தொடர்பான ஏற்பாடுகளில் இடம்பெற்றிருந்த பதிப்புரிமை சார்ந்த குற்றங்களும் உத்தேச சட்டமூலத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர்களைத் தடுத்து வைத்திருப்பது மற்றும் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பிறப்பிப்பது தொடர்பான திருத்தங்கள் பின்னர் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் உத்தேச சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனச் சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின்போதே சட்டமா அதிபர் தரப்பினால் இந்த விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
