Headlines

சட்டத்தை கையில் எடுக்கத் துடிக்கும் பிக்குகளின் அடாவடி: வீதியை மறித்து அமைக்கப்பட்ட பந்தலை அகற்றிய பொலிஸாருடன் தள்ளுமுள்ளு.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிக்குகள் சட்டவிரோதமாக அமைத்த கூடாரத்தை (Canopy) பொலிஸார் இன்று (15) அகற்றியதைத் தொடர்ந்து, மகா சங்கத்தினருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டு அப்பகுதியில் உச்சக்கட்டப் பதற்றம் நிலவியது.

நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுச் சிறையிலுள்ள ஞானசார தேரரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி, ஜனாதிபதி செயலகத்தைச் சுற்றியுள்ள பிரதான வீதியையும் போக்குவரத்தையும் முடக்கும் வகையில் போராட்டக்காரர்கள் இந்தத் தற்காலிகப் பந்தலை அமைத்திருந்தனர்.

சட்டத்தையும் பொது ஒழுங்கையும் சவாலுக்குட்படுத்தும் போக்கு:

நீதிமன்றத் தீர்ப்பை மாற்றியமைக்கக் கோரி, அரசாங்கத்திற்கு நிபந்தனைகளை விதித்து மிரட்டி வரும் இந்தப் போராட்டக் குழுவினர், வீதியை மறித்துக் கூடாரம் அமைத்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட முயன்றனர். பொதுமக்களின் போக்குவரத்திற்கும் பாதுகாப்புக்கும் இடையூறாக அமைக்கப்பட்ட இந்தச் சட்டவிரோதக் கூடாரத்தைப் பொலிஸார் அகற்ற முற்பட்ட போது, பிக்குகள் பொலிஸாருடன் நேரடியாக மோதலில் ஈடுபட்டனர்.

நீதிமன்றத் தீர்ப்புகளையும் நாட்டின் சட்டதிட்டங்களையும் மதிக்காமல், அரச அதிகார மையத்திற்கு முன்பாக வந்து சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துச் செயற்பட முயலும் இத்தகைய அடாவடித்தனங்கள் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றன.

பொதுமக்களின் பாதுகாப்பையும் நாட்டின் சட்டத்தின் மேலாதிக்கத்தையும் உறுதி செய்ய வேண்டிய பொலிஸார், இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் கூடாரத்தை அகற்றி வீதியை மீண்டும் போக்குவரத்திற்குச் சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர். சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை உணராது, வன்முறை மற்றும் அச்சுறுத்தல் பாணியில் போராட்டங்களை முன்னெடுப்பது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்கே பேராபத்தாக முடியும் எனக் சுட்டிக்காட்டப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *