Headlines

சவூதி அரேபியாவின் உயரமான கட்டடம் மீது ஏவுகணைத் தாக்குதல் – ரியாத்தில் பெரும் பதற்றம்!

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள, அந்நாட்டின் அரச முதலீட்டு நிதியத்தின் தலைமையகமான PIF கோபுரம் மீது இன்று (19) ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் ஆதரவைப் பெற்ற யேமனின் ஹூதி ஆயுதக் குழுவினரால் ஏவப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஏவுகணை இந்தக் கட்டடத்தைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் கட்டடத்தின் ஏழு முதல் எட்டு மாடிகள் வரையான பகுதிகளில் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதுடன், கட்டடத்தின் வெளிப்புற உலோகக் கட்டமைப்பின் சில பகுதிகளும் வளைந்து சேதமடைந்துள்ளன.

ரியாத்தின் முக்கிய நிதி மாவட்டத்தில் தாக்குதல்

சவூதி அரேபியாவின் முக்கிய நிதி மையமான மன்னர் அப்துல்லா நிதி மாவட்டத்தில் (King Abdullah Financial District – KAFD) இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து நிதி மாவட்டத்திற்குச் செல்லும் நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு அம்புலன்ஸ் வாகனங்களும் தீயணைப்பு வாகனங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

எனினும், தாக்குதலில் உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தவர்கள் தொடர்பான உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை.

ஹூதி ஏவுகணைத் தாக்குதல் எனச் சந்தேகம்

இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்களை அறிந்த மூன்று தரப்பினர், ஹூதி ஆயுதக் குழுவினரால் ஏவப்பட்ட ஏவுகணையே கட்டடத்தைத் தாக்கியதாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஹூதிகளால் ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொண்டதாக சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணி அறிவித்துள்ளது.

ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி, ஏவுகணையின் சிதைவுகள் கீழே விழுந்ததுடன் சொத்துச் சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக அந்தக் கூட்டணி தெரிவித்துள்ளது.

எனினும், கட்டடத்தில் ஏற்பட்ட சேதம் நேரடி ஏவுகணைத் தாக்குதலினாலா அல்லது ஏவுகணைச் சிதைவுகளினாலா ஏற்பட்டது என்பது தொடர்பில் தெளிவான உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

சவூதி அரச முதலீட்டு நிதியம், ரொய்ட்டர்ஸின் கருத்துக் கோரிக்கையைப் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ஹூதி அமைப்பினர் இந்தத் தாக்குதல் தொடர்பில் உடனடியாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது தாக்குதல்

ரியாத்தின் முக்கிய நிதி மாவட்டத்திலுள்ள கட்டடமொன்று இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாகத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

கடந்த நவம்பர் 8ஆம் திகதி இடம்பெற்ற ஹூதி தாக்குதலில் சவூதி அரேபியாவின் அரச எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் கட்டடம் சேதமடைந்திருந்தது.

இந்நிலையில், தற்போது அரச முதலீட்டு நிதியத்தின் தலைமையகமும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளமை சவூதி அரேபியாவின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான கவலைகளை அதிகரித்துள்ளது.

இன்று அதிகாலை ரியாத்தில் பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாக அந்நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.

யேமன் தலைநகரிலும் வான்வழித் தாக்குதல்

இதற்கிடையில், ஹூதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள யேமன் தலைநகர் சனாவில் இன்று அதிகாலை சவூதி போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஹூதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்தத் தாக்குதல்களின் சேதவிபரங்கள் உள்ளிட்ட மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

2027ஆம் ஆண்டுவரை நீடிக்கக்கூடிய மோதல்

யேமனில் ஹூதி அமைப்பினருக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் மேலும் ஆறு மாதங்கள் வரை நீடிக்கக்கூடும் எனச் சவூதி அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்ட மேற்கத்திய அதிகாரிகள் இருவரும், அந்தத் திட்டங்களை அறிந்த மற்றுமொரு தரப்பினரும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹூதிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், சவூதி ஆதரவுப் படைகள் யேமனில் குறிப்பிடத்தக்க இராணுவ முன்னேற்றங்களைப் பெற வேண்டும் என்பதே சவூதி தரப்பின் நோக்கமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாரம் யேமனில் செயற்படும் சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணியின் தளபதியும் மாற்றப்பட்டுள்ளார்.

செங்கடலின் முக்கிய பகுதிகள் ஹூதிகளின் கட்டுப்பாட்டில்

யேமனில் மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதல்களில் ஹூதி அமைப்பினர் குறிப்பிடத்தக்க நிலப்பரப்புகளைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, செங்கடல் கரையோரத்தின் முழுப் பகுதியும், சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல் மண்டெப் நீரிணைப் பகுதியும் ஹூதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிடுகிறது.

அத்துடன், யேமன் அரசாங்கத்தின் தற்காலிகத் தலைநகரான ஏடனை அண்மித்த உயர்நிலப் பகுதியில் அமைந்துள்ள தாயிஸ் நகரையும் ஹூதி படைகள் சுற்றிவளைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சவூதியின் பொருளாதாரத் திட்டங்களுக்குப் பின்னடைவு

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியா, தனது பொருளாதாரத்தைப் பல்துறை சார்ந்ததாக மாற்றுவதற்கான பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இளவரசர் முகமது பின் சல்மானின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சிகளுக்கு, யேமனுடனான தொடர்ச்சியான இராணுவ மோதல்கள் பெரும் சவாலாக அமைந்துள்ளன.

இந்த நிலையில், அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகத்தின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பரை சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று (18) ரியாத்தில் சந்தித்துள்ளார்.

யேமன் மோதல்கள் மீண்டும் ஆரம்பமான பின்னர் பிராட் கூப்பர் சவூதி அரேபியாவுக்கு மேற்கொண்டதாகப் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட மூன்றாவது பயணம் இதுவாகும்.

வளைகுடா பிராந்தியத்திலும் பதற்றம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி மாதம் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஆரம்பமான பரந்த மோதல் சூழ்நிலையில், வளைகுடா பிராந்தியத்திலும் அண்மைய நாட்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன் மற்றும் குவைத் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள ஈரானின் கேஷ்ம் தீவு மீது அமெரிக்கா செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டாரின் மத்தியஸ்தத்தில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளிலும் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு ஆரம்பமான சவூதி இராணுவத் தலையீடு

யேமன் தலைநகர் சனாவையும் நாட்டின் பெரும்பகுதியையும் ஹூதி அமைப்பினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் நோக்கில் சவூதி அரேபியா 2015ஆம் ஆண்டு அரபு நாடுகளின் இராணுவக் கூட்டணிக்குத் தலைமை தாங்கி யேமன் மோதலில் தலையிட்டது.

பல ஆண்டுகள் நீடித்த கடுமையான மோதல்களைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.

எனினும், அந்தப் போர்நிறுத்தம் 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

தற்போது சவூதி தலைநகரின் முக்கிய நிதிக் கட்டடங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளமை, யேமன் மோதலின் தாக்கம் சவூதி அரேபியாவின் பொருளாதார மையங்களையும் நேரடியாகப் பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *