Headlines

டயமண்ட் லீக் ஈட்டி எறிதலில் வரலாற்றுச் சாதனை: சம்பியன் பட்டத்தை வென்றார் இலங்கையின் ருமேஷ் தரங்க!

பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற 2026 டயமண்ட் லீக் (Diamond League) இறுதிப் போட்டியில், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் ருமேஷ் தரங்க பதிரண 89.04 மீற்றர் தூரம் எறிந்து முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். டயமண்ட் லீக் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

“சிறிய நாடான இலங்கையிலிருந்து வந்து, இது போன்ற ஒரு மாபெரும் போட்டியில் வெற்றி பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என 23 வயதான ருமேஷ் தனது வெற்றி குறித்துத் தெரிவித்தார்.

King Baudouin மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பத்தில் ருமேஷ் 80.42 மீற்றர் மற்றும் 79.73 மீற்றர் தூரத்தையே பதிவு செய்திருந்தார். எனினும், மூன்றாவது சுற்றில் தனது ஈட்டியை 89.04 மீற்றர் தூரத்திற்கு எறிந்து அவர் முதலிடத்தைக் கைப்பற்றினார். போலந்து வீரரான Dawid Wegner 87.47 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தையும், ட்ரினிடாட் மற்றும் டொபாகோ வீரரான முன்னாள் ஒலிம்பிக் சம்பியன் Keshorn Walcott 83.99 மீற்றர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

கடும் குளிரான காலநிலை காரணமாக தன்னால் மிக நீண்ட தூரத்தை எட்ட முடியவில்லை என ருமேஷ் விளக்கமளித்தார். காயம் காரணமாக இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கடந்த வாரம் இப்போட்டியிலிருந்து விலகியிருந்தார்.

இந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் ருமேஷ் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அத்துடன் ரோமில் இடம்பெற்ற டயமண்ட் லீக் போட்டியில் 92.62 மீற்றர் தூரம் ஈட்டியை எறிந்து தேசிய சாதனையுடன் உலக அளவில் முதலிடத்தைப் பதிவு செய்திருந்த அவர், நடப்பு ஆண்டில் இரண்டு முறை 92 மீற்றருக்கும் அதிகமான தூரத்தை எறிந்து தற்போது உலக தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Diamond League Final 2026 ஆண்களுக்கான ஈட்டி எறிதல் முடிவுகள் (முதல் 3 இடங்கள்):

  • ருமேஷ் தரங்க (இலங்கை) – 89.04m
  • Dawid Wegner (போலந்து) – 87.47m
  • Keshorn Walcott (ட்ரினிடாட்) – 83.99m

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *