இலங்கை டிஜிட்டல் சந்தைப்படுத்துபவர்கள் சங்கத்தின் (DMASL) தலைவர் அர்ஜுன் ஜெகருக்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, இலங்கையில் நடைபெறவுள்ள ‘டிஜிட்டல் சம்மிட் ஆசியா – இலங்கை 2026’ (Digital Summit Asia – Sri Lanka 2026) மாநாடு குறித்தும், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமது சங்கம் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் கட்டமைப்பின் அபிவிருத்தி குறித்த பரந்த நோக்கம் தொடர்பாகவும் அர்ஜுன் ஜெகர் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினார்.
‘The Epicentre’ என்ற தொனிப்பொருளின் கீழ், இந்த ‘டிஜிட்டல் சம்மிட் ஆசியா 2026’ மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் கொழும்பில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் (Water’s Edge) வளாகத்தில் நடைபெறவுள்ளது.
DMASL அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு நாள் மாநாட்டில், ஆசியா முழுவதிலும் உள்ள டிஜிட்டல் சந்தைப்படுத்தல், தொழில்நுட்பம், படைப்பாற்றல் மற்றும் வணிகத்துறைகளைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள் ஒன்றிணையவுள்ளனர்.
வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI), பிராண்ட் உருவாக்கம் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் போன்ற முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தும் விசேட உரைகள், குழு விவாதங்கள் மற்றும் செயலமர்வுகள் இந்த மாநாட்டில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
