Headlines

நாட்டைக் கட்டியெழுப்ப அரசியல், சமூக, பொருளாதார அமைப்புகளில் பாரிய மாற்றம் அவசியம் – அநுர குமார திசாநாயக்க.

செய்தி:

அரசியல் அதிகாரம் தந்தையிடமிருந்து மகனுக்குக் கடத்தப்படும் நடைமுறையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கேள்விக்குட்படுத்தியுள்ளதுடன், இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

“தந்தை ஜனாதிபதியாகும்போது மகனும் ஜனாதிபதியாக வேண்டும் என்று சிலர் நினைத்தார்கள். அதை நாம் மாற்ற வேண்டும்,” என ஜனாதிபதி இன்று (13) கஹட்டகஸ்திகிலியவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை குறித்த கவலைகளாலேயே பேரணிகள் ஏற்பாடு செய்யப்படுவதாகக் கூறப்படுவதை நிராகரித்த அவர், அரசாங்கம் எந்த அச்சுறுத்தலையும் எதிர்நோக்கவில்லை எனவும், அஞ்சுவதற்கு எந்த காரணமும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

“எங்களுக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதா? அதனால்தான் நாங்கள் பேரணிகளை நடத்துகிறோமா? இல்லை. இந்த அரசாங்கத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. நாங்கள் பயப்படவில்லை,” என ஜனாதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு வலுவான மக்கள் இயக்கம் அவசியம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி திசாநாயக்க, நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார அமைப்புகளில் அடிப்படை மாற்றங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

“நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும், அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும். அரசியல் ரீதியான மாற்றம் நமக்குத் தேவை. சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெரிய மாற்றங்கள் நமக்குத் தேவை,” என்றார்.

கடந்த கால அரசியல் நடைமுறைகளை விமர்சித்த அவர், அரசியல்வாதிகள் முன்னொருபோதும் பொதுமக்களுக்கு மேலானவர்களாகக் கருதப்பட்டார்கள் என்றார்.

2024 செப்டெம்பர் முதல் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் செய்த மாற்றங்களைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி திசாநாயக்க, காலாவதியான அரசியல் நடைமுறைகள் மற்றும் வரப்பிரசாதங்களை அது அகற்றத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் செய்யப்பட்ட மாற்றங்களைக் குறிப்பிட்ட அவர், கிராமங்களுக்குச் செல்லும் அரசியல்வாதிகளுடன் சென்ற பெரிய பாதுகாப்பு வாகனத் தொடரணிகள் இனி வழக்கமாக இருக்காது என்றார்.

“இப்போது பொலிஸார் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மாத்திரமே இருக்கிறார்கள்,” என்றார்.

நாட்டை புதிய திசையில் நகர்த்துவதற்கும், பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *