Headlines

பாதுகாப்பு பெட்டகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கில் பணம் மற்றும் தங்கம்: பதற்றத்தில் ராஜபக்ச வட்டத்தில் உள்ளவர்கள்.

நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களின் சொத்துக்களைச் சூறையாடிய ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன. முன்னாள் அமைச்சர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரின் பினாமி மற்றும் ஊழல் வலைப்பின்னல்கள் எவ்வாறு இயங்கி வந்தன என்பதற்குச் சான்றாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிரத்தியேகச் செயலாளரான சஞ்சய சமரசிங்கவின் வீட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையும், நீதிமன்ற விசாரணைகளும் அமைந்துள்ளன.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உளவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 12 மணியளவில் சஞ்சய சமரசிங்கவின் வீட்டில் அதிரடிச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. ராஜபக்சக்களின் நிழலில் பல ஆண்டுகளாகச் கோலோச்சிய அதிகாரிகளை வைத்துக்கொண்டு பொதுமக்களின் பணத்தை எப்படிச் சுருட்டித் தின்றுள்ளனர் என்பதை இந்தச் சோதனை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

பாதுகாப்பு பெட்டகத்தில் மறைக்கப்பட்ட கருப்புப் பணம்:

சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த நள்ளிரவுச் சோதனையின் போது, வீட்டின் அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிநவீன பாதுகாப்புப் பெட்டகம் ஒன்று (Safe) கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் திறக்குமாறு அதிகாரிகள் பலமுறை வலியுறுத்தியும், அதன் ‘கடவுச்சொல் தனக்கு மறந்துவிட்டது’ எனச் சந்தேகநபர் நாடகமாடியுள்ளார். பின்னர், தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டுப் பெட்டகம் உடைக்கப்பட்டுத் திறக்கப்பட்டது.

அதற்குள் இருந்து:

  • ரொக்கப் பணம்
  • சுமார் ரூ. 0.8 மில்லியன் மதிப்புள்ள கைக்கடிகாரம்
  • எட்டு தங்க முலாம் பூசப்பட்ட கால் சலங்கைகள்

ஆகியவை கைப்பற்றப்பட்டன. தன்னிடம் சிக்கியதும் “இது வாகனத்தை விற்ற பணம், பெற்றோரின் பணம்” எனப் பச்சைப் பொய்களைக் கூறித் தப்பிக்க முயன்ற சஞ்சய சமரசிங்கவின் முரண்பாடான வாக்குமூலங்கள், ராஜபக்சக்களின் பினாமி சாம்ராஜ்யத்தின் உண்மை முகத்தை மக்களுக்குப் போட்டுடைத்துள்ளன.

நீதிமன்றத்தில் பிணை பெற்றாலும் தொடரும் மக்கள் கோபம்:

இதனைத் தொடர்ந்து, நேற்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றச்செயல் வருமானச் சட்டம் எண் 05/2025 இன் கீழ் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரைத் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்துள்ளது. வழக்கு டிசம்பர் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் நாட்டை ஆண்டு ஊழல் செய்த காலத்தின் எச்சங்கள் இன்றளவும் நாட்டின் வளங்களை எப்படிச் சூறையாடி வைத்துள்ளன என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சியாகும். மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்துப் பாதுகாத்து வரும் இத்தகைய ஊழல்வாதிகளையும், அவர்களுக்குத் துணையாக நிற்கும் அரசியல் முகவர்களையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *