Headlines

பாஸ்வேர்ட் ஞாபகமில்லை என்ற சுரேஷ் சலேயின் ‘நாடகம்’ இனி செல்லாது! – மருத்துவ சபை அனுமதியுடன் சி.ஐ.டி-யிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அதிரடி.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே, வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) வசம் ஒப்படைக்கப்படவுள்ளார். 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொண்டு வரும் சுரேஷ் சலே, பூரண குணமடைந்துள்ளதாக 10 பேர் கொண்ட விசேட மருத்துவ சபை நீதிமன்றில் இன்று (06) அறிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த பரபரப்புத் தகவல்கள் வெளியாகின. நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சம்பத் இந்திக குமார மற்றும் 9 விசேட வைத்திய நிபுணர்கள் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இன்று மாலை மீண்டும் சி.ஐ.டி வசம்:

சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், “சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து 10 மருத்துவர்கள் கையெழுத்திட்ட இறுதி மருத்துவ அறிக்கை கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. அதில் மருந்துகளை நேரத்திற்கு வழங்குதல், தகுந்த கண்காணிப்பு போன்ற 6 முக்கிய பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் தற்போது வார்டு 42 இல் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறத் தகுதியானவர் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதால், இன்று மாலையே அவர் மீண்டும் சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்படுவார்” என்றார்.

நீதிமன்றில் வெடித்த கடுமையான காரசார வாதங்கள்:

விசாரணைகளுக்கு சுரேஷ் சலே ஒத்துழைக்கவில்லை என குற்றம் சாட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், “இவரது உடல்நிலை மோசமடைந்தது இவராகவே மேற்கொண்ட உண்ணாவிரதத்தால்தான். இவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய 46 ஆவணங்கள், 9,700 பக்கங்கள் மற்றும் 247 பக்க சத்தியக் கடதாசி என்பவற்றைத் தயார் செய்ய முடிந்துள்ளது. ஆனால், தனது கைத்தொலைபேசியின் கடவுச்சொல்லை (Password) நினைவுகூர முடியவில்லை என நாடகமாடுகிறார்.

இவர் இராணுவத்தில் இருந்தவர், இராணுவ வைத்தியசாலையை இலவசமாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், இவரோ தனது காதுகளைக் கூட சுத்தம் செய்யவில்லை, பற்களைக் கூட சரியாகத் துலக்கவில்லை. அதனால் வந்த பல் பிரச்சினைக்குத்தான் இங்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவருக்குப் பொருத்தப்பட்ட இதயக் கருவிக்கு 4 மில்லியன் ரூபா அரச பணம் செலவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை அனைவரும் மறந்துவிட்டனர். இவருக்கு பின்னால் இருக்கும் சதிவலைகளை நாங்கள் உடைப்போம். இவர் 119 நாட்களாக இந்த விசாரணையைத் தாமதப்படுத்தியுள்ளார்” என ஆவேசமாக வாதிட்டார்.

சலே தரப்பு வழக்கறிஞரின் கடும் எதிர்ப்பு:

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ, “தயவுசெய்து நீதிமன்றில் இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். எனது கட்சிக்காரரை அவமானப்படுத்தும் நோக்குடனேயே இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. சலே பற்களைத் துலக்கினாரா இல்லையா என்பது இந்த வழக்குடன் எவ்வாறு தொடர்புடையது?

இவர்கள்தான் இந்த மருத்துவர்களை சதிகாரர்கள் என்றனர், இன்று இவர்களே அவர்களுக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். எங்களுக்கு மருத்துவ அறிக்கைகள் கூட இதுவரை வழங்கப்படவில்லை. கடவுச்சொற்கள் குறித்து அவரிடம் எந்த வாக்குமூலமும் பெறப்படவில்லை. அவர் வைத்தியசாலையில் இருந்தபோதே சாத்தியமான 3 கடவுச்சொற்களை எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளார். உண்மைச் சதிகாரர்கள் முறைப்பாட்டாளர்கள் தரப்பிலேயே உள்ளனர்” என பதில் வாதங்களை முன்வைத்தார்.

நீதிமன்றின் முடிவு:

இருதரப்பு சமர்ப்பணங்களையும் நீண்ட நேரம் பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான், கையடக்கத் தொலைபேசியின் கடவுச்சொற்களைப் பெறுவதற்குத் தேவையான உள்நாட்டு மற்றும் சர்வதேச நிபுணத்துவ தொழில்நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்துமாறு சி.ஐ.டிக்கு அறிவுறுத்தினார். அத்துடன், இந்த விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை மற்றும் மேலதிக விபரங்களுடன் வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *