Headlines

புகையிரத வேலைநிறுத்தத்திற்கு மத்தியில் அதிரடி: இனி ஆன்லைனிலேயே பயணச்சீட்டுகளைப் பெறலாம்!

புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகள் இனி ஆன்லைன் (Online) மூலம் தங்களது பயணச்சீட்டுகளைக் கொள்வனவு செய்ய முடியும் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, www.pravesha.lk என்ற இணையதளம் மூலமாகவும், ‘Pravesha’ மொபைல் செயலி (Mobile App) மூலமாகவும் இந்த வசதியைப் பயணிகள் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆன்லைன் மூலம் சீட்டுகளைப் பெறும் நடைமுறை:

  1. pravesha.lk இணையதளத்திற்குச் செல்லுதல்.
  2. உங்களது பயண விபரங்களை உள்ளிட்டு, கடன் அட்டை (Credit Card) அல்லது பற்றாட்டை (Debit Card) மூலம் கட்டணத்தை முடித்தல்.
  3. SMS அல்லது மின்னஞ்சல் (Email) மூலம் E-ticket ஐப் பெற்றுக்கொள்ளுதல்.
  4. புகையிரத நிலையம் மற்றும் புகையிரதத்தில் E-ticket இல் உள்ள QR குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்து சரிபார்த்தல்.

தற்போதைய புகையிரதப் பொதுமுகாமையாளரை உடனடிப் பதவியிலிருந்து நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, புகையிரத இணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள பின்னணியிலேயே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாகப் பல புகையிரத நிலையங்களில் பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படவில்லை. இருப்பினும், வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மத்தியிலும் இன்று (17) காலை மற்றும் பிற்பகல் வேளைகளில் புகையிரத சேவைகள் வழக்கம் போல் இயங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMA), புகையிரத ஊழியர்கள் சங்கம், பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் சங்கம் மற்றும் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 29 தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று (16) நள்ளிரவு முதல் இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக SLRSMA எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *