Headlines

IPL 2026: முதல் வெற்றியை பெற்ற சிஎஸ்கே.. தோல்வி பயணத்திற்கு முடிவு..சேப்பாக்கத்தில் சஞ்சு சாம்சனின் ‘ருத்ரதாண்டவம்’

சென்னை: ஐபிஎல் 2026 தொடரில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான மோதல். முந்தைய போட்டிகளில் சொதப்பியதால் தன் மீதே சந்தேகம் கொண்ட சிஎஸ்கே கேப்டன் சஞ்சு சாம்சன், நேற்று டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்து, மிரட்டலான சதம் விளாசி அணிக்கு இந்த சீசனின் முதல் வெற்றியைத் தேடித்தந்தார். அத்துடன், சேப்பாக்கத்தில் தொடர்ந்து 6 போட்டிகளில் தோற்ற பழிக்கும் முற்றுப்புள்ளி வைத்தது சிஎஸ்கே.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை, சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 212 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. ஆரம்பம் முதல் இறுதி வரை நங்கூரம் போல் நிலைத்து நின்ற சாம்சன், வெறும் 56 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் குவித்து, தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்தார். நடராஜன் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து அவர் சதத்தை எட்டிய தருணம் மைதானமே அதிர்ந்தது. அவருக்குப் பக்கபலமாக ஆடிய இளம் வீரர் அயுஷ் மகாத்ரே, 36 பந்துகளில் 59 ரன்கள் குவித்து அரைசதம் அடித்தார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். இறுதியில் ஷிவம் தூபே ஒரு பிரம்மாண்ட சிக்ஸருடன் இன்னிங்ஸை முடிக்க, சிஎஸ்கே ஸ்கோர் 212 ஐ எட்டியது.

213 ரன்கள் என்ற மலைபோன்ற இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு கே.எல். ராகுல் மற்றும் பதும் நிஸ்ஸங்கா அதிரடித் தொடக்கம் கொடுத்தனர். 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை எட்டியதால் சென்னை ரசிகர்கள் சற்று கவலையடைந்தனர். ஆனால், கலீல் அகமது வீசிய பந்தில் ராகுல் (18) அவுட்டாக, ஆட்டம் தலைகீழாக மாறியது. அடுத்து வந்த டெல்லி கேப்டன் அக்ஸர் படேலை, இளம் பந்துவீச்சாளர் குர்ஜன்பிரீத் சிங் தனது முதல் பந்திலேயே வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். சர்பராஸ் கான் பிடித்த அற்புதம் கேட்ச் இதில் முக்கிய பங்கு வகித்தது.

இதன்பின் டெல்லியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தன. முன்னாள் சிஎஸ்கே வீரர் சமீர் ரிஸ்வி, டேவிட் மில்லர் ஆகியோர் ஜேமி ஓவர்ட்டனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். மில்லரை கிளீன் பவுல்ட் செய்த ஓவர்ட்டனின் மாயாஜால பந்து ஆட்டத்தின் போக்கை மாற்றியது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனி ஆளாகப் போராடி அரைசதம் அடித்தாலும், ரன் ரேட் அழுத்தம் காரணமாக டெல்லியால் மீள முடியவில்லை. ஜேமி ஓவர்ட்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லியின் முதுகெலும்பை உடைத்தார். இறுதியில், டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, முக்கியமான புள்ளிகளைத் தமதாக்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *