Headlines

அமெரிக்காவில் அதிகரித்த கச்சா எண்ணெய் இருப்பு; சர்வதேச சந்தையில் விலை சரிவு.

வியாழக்கிழமையன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1 டாலருக்கும் அதிகமாக சரிந்தது. அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய எண்ணெய் தேவை கணிப்பை முன்னறிவிப்பாளர்கள் குறைத்ததே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். இருப்பினும், இந்த மோதலால் ஏற்பட்டுள்ள விநியோகக் கட்டுப்பாடுகள் சந்தை மேலும் சரிவடையாமல் ஒரு ஆதரவை வழங்கியுள்ளது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் எதிர்கால விலை 1.29 டாலர் அல்லது 1.5 சதவீதம் சரிந்து, பேரல் ஒன்றுக்கு 87.69 டாலராக இருந்தது. அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை 1.30 டாலர் அல்லது 1.6 சதவீதம் சரிந்து 81.97 டாலராக வீழ்ச்சியடைந்தது.

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) புதன்கிழமை வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில், 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய எண்ணெய் தேவை வளர்ச்சி கணிப்பை நாளொன்றுக்கு 580,000 பேரல்களாகக் குறைத்துள்ளது.

அதே நாளில், சர்வதேச எரிசக்தி முகமை (IEA) வெளியிட்ட தகவலில், போர் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடு மற்றும் அதிக விலைகள் தேவையைக் குறைத்துள்ளதால், இந்த ஆண்டு நுகர்வு நாளொன்றுக்கு 1.6 மில்லியன் பேரல்கள் சுருங்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. இது கடந்த மாதம் கணிக்கப்பட்ட 1 மில்லியன் பேரல் சுருக்கத்தை விட அதிகமாகும்.

மேலும், அமெரிக்காவின் வணிக ரீதியான கச்சா எண்ணெய் இருப்பில் ஏற்பட்ட எதிர்பாராத அதிகரிப்பும் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தியது. ஏற்றுமதி சரிந்ததால், கடந்த வாரம் ஜனவரி 2023 க்குப் பிறகு மிகப்பெரிய வாராந்திர உயர்வை இது பதிவு செய்துள்ளதாக எரிசக்தி தகவல் நிர்வாகம் (EIA) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 7 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கச்சா எண்ணெய் இருப்பு 17.4 மில்லியன் பேரல்கள் அதிகரித்து 424.4 மில்லியன் பேரல்களாக உயர்ந்தது. இது ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிந்தைய அதிகப்பட்ச இருப்பு ஆகும். ஆய்வாளர்கள் 1.4 மில்லியன் பேரல்கள் இருப்பு குறையும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த அதிகரிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயினும், வளைகுடாப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே முட்டுக்கட்டையாக உள்ள பேச்சுவார்த்தைகள் விலை மேலும் சரிவதைத் தடுத்துள்ளன. ஜூன் மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கும், அதை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெரையைத் தீர்மானிப்பதற்கும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஈரானிய உயர் அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.

மத்திய கிழக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கான இரண்டு முக்கிய வழிகளான ஹார்முஸ் நீரிணை மற்றும் பாப் எல்-மண்டேப் நீரிணையில் செவ்வாயன்று கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், பிராந்தியத்தில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகத்தில் நீடிக்கும் அபாயங்களை எடுத்துக் காட்டுகின்றன.

“இந்த கடல் பகுதிகளில் கப்பல் போக்குவரத்திற்கான பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது, இதனால் கப்பல்கள் தங்களது சிக்னல்களை (signals) அணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது கப்பல் போக்குவரத்தில் வெளிப்படைத்தன்மையைக் குறைக்கிறது மற்றும் உண்மையான விநியோக அளவைக் கண்காணித்து மதிப்பிடுவதை சந்தைக்கு கடினமாக்குகிறது,” என்று ஹைடாங் ஃபியூச்சர்ஸ் (Haitong Futures) ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *