ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை, 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆப்பிரிக்க மண்ணுக்கு பிரம்மாண்டமாகத் திரும்புகிறது. அடுத்த ஆண்டு (2027) நடைபெறவுள்ள இந்தப் போட்டி, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று நாடுகளில் நடத்தப்படவுள்ளது.
இந்தப் போட்டியை நடத்துவதற்கான 12 மைதானங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தென்னாப்பிரிக்காவின் எட்டு நகரங்கள், ஜிம்பாப்வேயின் மூன்று நகரங்கள் மற்றும் நமீபியாவின் தலைநகரான விண்ட்ஹோக் ஆகியவை போட்டியை நடத்தும் நகரங்களாக அன்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
போட்டிகள் நடைபெறும் மைதானங்களின் விவரம்:
தென்னாப்பிரிக்கா:
- வான்டரர்ஸ் ஸ்டேடியம் (ஜோகன்னஸ்பர்க்)
- செஞ்சுரியன் (டிஷ்வானே)
- நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் (கேப் டவுன்)
- கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானம் (டர்பன்)
- செயின்ட் ஜார்ஜ் பார்க் (கெபெர்ஹா)
- மாங்காங் ஓவல் (புளூம்ஃபோன்டைன்)
- போலண்ட் பார்க் (பார்ல்)
- பஃபெலோ பார்க் (குமோம்போ சிட்டி)
ஜிம்பாப்வே:
- ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் (ஹராரே)
- குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (புலவாயோ)
- ஃபேல் மோசி-ஓ-துன்யா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் (விக்டோரியா ஃபால்ஸ்)
நமீபியா:
- நமீபியா கிரிக்கெட் மைதானம் (விண்ட்ஹோக்)
உலகின் தலைசிறந்த 14 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, ஆப்பிரிக்காவின் கலாசார பன்முகத்தன்மை, ஒற்றுமை மற்றும் விருந்தோம்பலை பறைசாற்றும் வகையில் அமையும். கடைசியாக 2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கென்யா ஆகிய நாடுகள் இணைந்து உலகக் கோப்பையை நடத்தியிருந்தன. நமீபியா, மூத்த கிரிக்கெட் உலகக் கோப்பையை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
“இது 2027 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான பாதையில் ஒரு உற்சாகமான மைல்கல்,” என்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா தெரிவித்தார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்காவுக்கு இந்தப் போட்டி திரும்புவது கிரிக்கெட் விளையாட்டுக்கு ஒரு முக்கிய தருணம் என்றும், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகியவை ஒரு மறக்க முடியாத நிகழ்வை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த விழாவில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நட்சத்திரங்களான கிரேம் ஸ்மித், மக்காயா நிதினி, ஹாஷிம் ஆம்லா, டெம்பா பவுமா மற்றும் ககிசோ ரபாடா ஆகியோருடன் ஜிம்பாப்வேயின் ஹாமில்டன் மசகாட்சா மற்றும் நமீபியாவின் ருடால்ஃப் ஜான்சன் வான் வூரென் ஆகியோர் கலந்துகொண்டனர்.
புதிய போட்டி வடிவம்:
2027 உலகக் கோப்பை, அதிக போட்டித்தன்மை கொண்ட புதிய மூன்று கட்ட வடிவத்தில், மொத்தம் 57 போட்டிகளுடன் நடைபெறும்.
- சூப்பர் சீரிஸ்: 12 முதல் 14 வரை தரவரிசையில் உள்ள மூன்று அணிகள் ரவுண்ட்-ராபின் முறையில் போட்டியிடும், இதில் வெற்றிபெறும் அணி அடுத்த சுற்றுக்குச் செல்லும்.
- குழு சுற்று: 12 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு (தலா 6 அணிகள்) ரவுண்ட்-ராபின் முறையில் போட்டியிடும். ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளும், அடுத்த சிறந்த தரவரிசை பெறும் அணியும் என மொத்தம் 7 அணிகள் சூப்பர் 7 சுற்றுக்கு முன்னேறும்.
- சூப்பர் 7: 7 அணிகள் பங்கேற்கும் இந்த சுற்றில், ரவுண்ட்-ராபின் முறையில் 21 போட்டிகள் நடைபெறும். இதில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
ரசிகர்கள் டிக்கெட் விற்பனை மற்றும் பிற புதுப்பிப்புகள் பற்றிய தகவல்களைப் பெற இப்போது தங்களை பதிவு செய்துகொள்ளலாம்.
