களுத்துறை, நாகொட பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 9ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த உணவக உரிமையாளரின் மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி காலை 7.40 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
இந்தச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில், நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். எனினும், அவர் இன்று (11) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் தொடங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
