Headlines

சட்டத்தின் ஆட்சியை அடியோடு நிராகரித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன் வீதி மறியல்: இன்று காலையும் தொடரும் பிக்குகளின் அச்சுறுத்தல் போராட்டம்!

நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையிலுள்ள பூஜ்ய கலேகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, மகா சங்கத்தினரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் “சீவரத்திற்கு நீதி – தேசிய சபதம் மற்றும் சுதந்திர நடைபயணம்” போராட்டத்தின் பங்கேற்பாளர்கள், இன்று (16) காலையும் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வீதியை அடைத்துத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்பாக அரசாங்கம் உடனடியாக ஒரு திட்டவட்டமான பதிலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மகா சங்கத்தினரும் அவர்களது ஆதரவாளர்களும் நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகப் பகுதியை வந்தடைந்தனர்.

அரசாங்கத்தின் தெளிவான நிலப்பாடு – அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு சலுகை இல்லை:

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக, சட்டத்திற்குப் புறம்பாக இவ்வாறான ஒரு விவகாரத்தில் உடனடியாகத் திட்டவட்டமான பதிலை வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற ஜனாதிபதியின் பணியாட்டொகுதிப் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, அங்கு கூடி நின்ற பிக்குகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது, அவர்களின் கோரிக்கை குறித்து ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக மட்டுமே அரசாங்கம் இந்த விவகாரத்தில் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் என்பதற்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சட்ட நடைமுறைகளை மதிக்காத பிடிவாதம்:

இருப்பினும், இந்தச் சட்ட நடைமுறைகளுக்கு எவ்வளவு காலம் எடுக்கும் எனப் பிரபாத் சந்திரகீர்த்தியிடம் அங்கிருந்த பிக்குகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது என அவர் பதிலளித்ததைத் தொடர்ந்து, தங்கள் நோக்கம் நிறைவேறும் வரை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலேயே தங்கியிருந்து போராட்டத்தைத் தொடரப் போவதாகப் பிக்குகளும் அவர்களது ஆதரவாளர்களும் அறிவித்துள்ளனர்.

நாட்டின் நீதித்துறையையும் அரசியலமைப்பையும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வளைக்க நினைப்பதும், தலைநகரின் பிரதான வீதியை மறித்துப் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையூறு விளைவிப்பதும் ஜனநாயக முறைமைக்கு எதிரான அப்பட்டமான அச்சுறுத்தலாகும். நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தண்டனை பெற்ற ஒருவரை விடுவிக்கக் கோரி சட்டத்தின் ஆட்சியைச் சவாலுக்குட்படுத்தும் இத்தகைய போக்கிற்கு அரசாங்கம் அடிபணியக் கூடாது என்பதே பரவலான கருத்தாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *