Headlines

இலங்கை – ஆந்திரப் பிரதேசம் இடையே பொருளாதார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை!

இலங்கைக்கும் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலொன்னே, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தபோதே இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 31ஆவது இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (CII) பங்காளித்துவ உச்சிமாநாடு 2026இன் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக புதுடில்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கை முதலீடுகளுக்கு பாராட்டு

சந்திப்பின்போது இலங்கை உயர்ஸ்தானிகரை வரவேற்ற ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விசாகப்பட்டினத்தில் இலங்கை முதலீட்டுடன் ஆடை உற்பத்தித் தொழிற்சாலையொன்று நிறுவப்பட்டுள்ளதை, இந்தியாவில் இலங்கை மேற்கொண்டுள்ள வெற்றிகரமான முதலீட்டுக்கான எடுத்துக்காட்டாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அண்மைக்கால பொருளாதார நெருக்கடிகளிலிருந்து இலங்கை மீண்டு, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றங்களையும் அவர் பாராட்டியுள்ளார்.

இலங்கையின் தொடர்ச்சியான பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை விரிவுபடுத்த பேச்சுவார்த்தை

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான அரசியல் உறவுகளை ஆழமான பொருளாதார ஒத்துழைப்பாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலொன்னே இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக இலங்கைக்கும் ஆந்திரப் பிரதேசத்திற்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் இரு தரப்பு நிறுவனங்களுக்கிடையிலான வர்த்தகப் பங்காளித்துவங்களை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், கொழும்புக்கும் விசாகப்பட்டினத்திற்கும் இடையிலான போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துவது மற்றும் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

தொழில்துறை ஒத்துழைப்புக்கு புதிய வாய்ப்புகள்

இலங்கை முதலீடுகள் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், ஏற்றுமதியை அதிகரித்தல் மற்றும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்திக்கு வழங்கும் பங்களிப்புகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரு தரப்பினருக்கும் பரஸ்பர நன்மைகளை ஏற்படுத்தும் வகையில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படத் தயாராக இருப்பதாக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு, இலங்கைக்கும் ஆந்திரப் பிரதேசத்திற்கும் இடையில் தொழில்துறை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை எடுத்துக்காட்டுவதாக புதுடில்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *