Headlines

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐ.நாவில் இன்று விவாதம்!

ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63வது வருடாந்த கூட்டத்தொடர் இன்று (7) ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தோனேசியாவின் தூதுவர் சித்தார்தோ ரெசா சூர்யோடிபுரோ தலைமையில் ஆரம்பமாகும் இக்கூட்டத்தொடரின் ஆரம்ப அமர்வில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) உரையாற்றவுள்ளார்.

இந்தக் கூட்டத்தொடரின் போது, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்த உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் எழுத்துமூலமான புதுப்பிக்கப்பட்ட அறிக்கை பரிசீலிக்கப்படவுள்ளது. 2025 ஒக்டோபர் முதல் 2026 ஜூலை வரையான காலப்பகுதியை உள்ளடக்கிய இந்த அறிக்கையானது, ஊழல் ஒழிப்பு, அரசியல் கொலைகள், பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறைமிக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதாகவும், இதனால் தன்னிச்சையான கைதுகள் இடம்பெறுவதாகவும் குறித்த அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதுடன், காணி மற்றும் மதத் தலங்கள் தொடர்பான பதற்றங்கள் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் நீண்டகாலமாக நிலவும் தண்டனை விலக்கு கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், பொறுப்புக்கூறலை வலுப்படுத்தி சமூக ஆற்றுப்படுத்தலை முன்னெடுக்கவும் இலங்கை அரசாங்கம் மேலும் பல காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *