Headlines

ஜனாதிபதி – இலங்கை சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள் இடையிலான சந்திப்பு: 22 ஆவது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமர திசாநாயக்க அவர்களுக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த இச்சந்திப்பின் போது, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இது தொடர்பான தங்களது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைத்தனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஜனாதிபதி செவிமடுத்ததுடன், இவ்விடயம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும், நாட்டின் நீதித்துறை அமைப்பை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.

நீதியை நிர்வகிக்கும் பொறுப்பு நீதிமன்றங்களுக்கு மாத்திரம் உரியதல்ல என்றும், அது விசாரணைகள், வழக்குத் தொடுத்தல் மற்றும் தீர்ப்பு வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயல்முறையாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதற்கமைய, ஒட்டுமொத்த செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கில், சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC), இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகியவற்றின் மனித வளங்களை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்திற்கு விரிவுபடுத்தவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் பிராந்திய ரீதியில் நடைபெறுவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இதன் மூலம் பொதுமக்கள் நீதியைப் பெற்றுக்கொள்வது மேலும் இலகுவாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீதிமன்றங்களுக்குத் தேவையான பௌதீகக் கட்டமைப்பு வசதிகளை வழங்கவும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இச்சூழ்நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானம் எந்தவொரு தனிநபர் அல்லது குழுவையும் கருத்திற்கொண்டு எடுக்கப்படவில்லை என்றும், அது பரந்த பொது நலன் கருதியே எடுக்கப்பட்டது என்றும் ஜனாதிபதி திசாநாயக்க வலியுறுத்தினார்.

இத்திருத்தமானது ஒட்டுமொத்த அமைப்பிலும் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் பரந்த சீர்திருத்தத் திட்டத்தின் ஒரு அங்கம் மாத்திரமே என்றும், இது தனது தனிப்பட்ட கருத்தோ அல்லது அரசாங்கத்தின் நிலைப்பாடோ மாத்திரம் அல்ல என்றும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கோ அல்லது அவர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கோ கொள்கை ரீதியான எதிர்ப்பு எதுவும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். எனினும், ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான தீர்மானம், பரந்த இணக்கப்பாட்டை எட்டும் நோக்கில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் முன்மொழிந்தனர்.

இக்கலந்துரையாடலில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய ஆகியோருடன் சங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *