Headlines

மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பிக்காதது ஏன்? செப்டெம்பர் 22 இல் ஆஜராகுமாறு வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்பிய குற்றச்சாட்டின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் (SIS) சுரேஷ் சல்லே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 100 நாட்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அவர் நீதிமன்ற விசாரணைகளில் இருந்து தப்பிப்பதற்காக “திட்டமிடப்பட்ட மருத்துவ சூழ்ச்சி” (premeditated medical conspiracy) ஒன்றை முன்னெடுத்துள்ளதாக அரச வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அதிர்ச்சித் தகவல் வௌியானது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் சமர்ப்பணங்களை மேற்கொள்கையில், கடந்த ஜூன் 07 ஆம் திகதி முதல் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சல்லே, எந்தவித தீவிர மருத்துவப் பாதிப்புகளும் இன்றித் தொடர்ந்து 100 நாட்களாக அங்கு தங்கியிருப்பதாகத் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சல்லே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தியசாலையில் சேர்ந்ததாகச் சுட்டிக்காட்டிய அரச தரப்பு, இந்த நீண்டகால வைத்தியசாலை வாசம் விசாரணைகளைத் தாமதப்படுத்தவும், தொடர்புடைய ஏனைய நபர்களைப் பாதுகாக்கவும் முன்னெடுக்கப்படும் சூழ்ச்சி எனச் சந்தேகிப்பதாகக் கூறியது.

மேலும், சுரேஷ் சல்லேயின் மருத்துவ நிலை குறித்து ஆராய நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஐந்து பேரடங்கிய மருத்துவக் குழுவின் அறிக்கையோ அல்லது ஏனைய மருத்துவ சான்றிதழ்களோ இதுவரை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாமை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

சமர்ப்பணங்களைப் பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான், நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காகவும், சுரேஷ் சல்லேயின் மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பிக்காததற்கான காரணங்களை விளக்குவதற்காகவும் வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி நீதிமன்றில் நேரில் ஆஜராகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *