Headlines

முன்னாள் பொலிஸ் பரிசோதகருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை: உயிர்த்த ஞாயிறு விசாரணையில் அதிரடித் திருப்பம்!

278 பேர் உயிரிழக்கவும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடையவும் காரணமான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையில், முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் (SIS) சுரேஷ் சல்லே மற்றும் தாக்குதலாளிகளுக்கு இடையிலான தொடர்புகள் குறித்து இரண்டு புதிய முக்கிய சான்றுகளை அரச தரப்பு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விரிவான சமர்ப்பணங்களை மேற்கொண்டார். “தம்பியன்” என அறியப்படும் முன்னாள் இராணுவ புலனாய்வுத் தகவலாளி, 2018 ஆம் ஆண்டிலேயே சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்குத் துல்லியமான தகவல்களை வழங்கியிருந்தார் என்றும், ஆனால் அந்தத் தகவல்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உரிய நேரத்தில் வழங்கப்படாமல் மறைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், வவுணதீவில் இரு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு சஹ்ரானின் குழுவே காரணம் எனத் தெரிந்தும், அதனை விடுதலைப் புலிகள் மீது பழியடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அரச தரப்பு சுட்டிக்காட்டியது.

சஹ்ரான் ஹாஷிம் மன்னார் கடல் வழியாக்கப் பலமுறை இந்தியா சென்று வந்துள்ளதாகவும், அவருக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் பாதுகாப்பும், ஷாங்க்ரி-லா ஹோட்டலில் குண்டுவெடித்த இன்ஷாஃபின் மாமனாரான அலாவுதீனின் நிதி உதவியும் கிடைத்ததாக புலனாய்வாளர்கள் நம்புவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, சஹ்ரான் உள்ளிட்ட தீவிரவாதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வைத்துள்ளார் என்றும், சஹ்ரானின் சகோதரரைச் சந்தித்த பின்னரும் அவரைக் கைது செய்யத் தவறியுள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கோனார பண்டாரவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுரேஷ் சல்லே தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் விரைவில் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், அரச தரப்பு சமர்ப்பித்த தகவல்கள் அனைத்தும் வெறும் குற்றச்சாட்டுகளே தவிர வலுவான சான்றுகள் அல்ல என சுரேஷ் சல்லே சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ வாதிட்டார். இதனையடுத்து வழக்கின் மேலதிக விசாரணையை செப்டெம்பர் 22 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *