Headlines

நேபாளத்தில் திடீர் வெள்ளம்: கோர்க்கா மாவட்டத்தில் பாலங்கள், வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

நேபாளத்தின் கோர்க்கா மாவட்டத்தில் உள்ள புதி கண்டகி ஆற்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், சும்னுப்ரி (Chumnubri) மற்றும் தார்ச்சே (Dharche) கிராமப்புற ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புகள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இந்த வெள்ளத்தில் பல வீடுகள், இரண்டு தொங்கு நடைபாலங்கள் மற்றும் வாகனங்கள் செல்லக்கூடிய ஒரு இரும்புப் பாலம் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டன. பல குடியிருப்புகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, மேலும் பல வீடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன. நீர்மின் திட்டம் ஒன்றிற்குச் சொந்தமான கட்டுமான முகாம் மற்றும் சில உபகரணங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, காத்மாண்டுவிற்கு மேற்கே சுமார் 100 கிமீ (62 மைல்) தொலைவில் உள்ள கோர்க்கா மாவட்டத்தின் சும்னுப்ரி கிராமத்தில் ஏற்பட்ட வறண்ட மண்சரிவு காரணமாக புதி கண்டகி ஆற்றில் அடைப்பு ஏற்பட்டு, பின்னர் அது உடைந்ததால் ஆற்றுப் படுகையின் கீழ்நோக்கிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. எவ்வாறாயினும், சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, மேலும் சேத விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

நேபாள அதிகாரிகள் கிராமவாசிகளைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தினர், ஆனால் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாக அறிக்கைகள் இல்லை. அதிகாலை 4.00 மணி முதல் உக்யுலுங் மற்றும் சியார் ஆறுகளில் இருந்து பலத்த சத்தம் கேட்டதையடுத்து, குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடத் தொடங்கினர். நீர்மட்டம் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

சும்னுப்ரியில் உள்ள சிர்திபாஸுக்கு (Sirdibas) மேலே மண்சரிவு ஏற்பட்டதாக ஆரம்பகட்ட அறிக்கைகள் கிடைத்துள்ளதாக கோர்க்காவின் தலைமை மாவட்ட அதிகாரி தர்மேந்திர குமார் மிஸ்ரா தெரிவித்தார். புதி கண்டகி ஆறு என்பது திரிசூலி ஆற்றின் ஒரு கிளை ஆறாகும். இதே ஆற்றின் மற்றொரு கிளை ஆற்றில் கடந்த ஆகஸ்ட் மாதம் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 1,457 பேர் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“ஆற்றங்கரையின் கீழ்நோக்கிய பகுதிகளில் வசிக்கும் கிராமவாசிகளை வெளியேறி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்,” என்று கோர்க்கா மாவட்டத்தின் சிரேஷ்ட அதிகாரி தர்மேந்திர குமார் மிஸ்ரா தெரிவித்தார். பல வீடுகள் மற்றும் இரண்டு தொங்கு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், வெள்ளத்தால் நீர்மின் திட்டம் சேதமடைந்ததாகவும் மிஸ்ரா உறுதிப்படுத்தினார்.

தேசிய பேரிடர் அதிகாரிகள் கோர்க்கா, தனஹுன், சித்வான், கிழக்கு நவல் பராசி மற்றும் மேற்கு நவல் பராசி மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை வெள்ளம் குறித்து எச்சரித்துள்ளனர்.

“ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்கள் சரியான நேரத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவதை உறுதி செய்ய உதவவும், தேவைக்கேற்ப தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும்,” என்று தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.

இராணுவம் மற்றும் பொலிஸ் மீட்புப் படையினர் அப்பகுதியைச் சென்றடைந்துள்ளதாகவும், ஹெலிகாப்டர் மூலம் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *