பூட்டானில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான நனவான உணவு முறைமைகள் (Conscious Food Systems) தொடர்பான உலகளாவிய உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இலங்கை திரும்பியுள்ளார்.
ஓகஸ்ட் 31 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 5 ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்ஜியல் வாங்சுக்கைச் (Jigme Khesar Namgyel Wangchuck) சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் மூலம் இலங்கை மற்றும் பூட்டான் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பூட்டான் பிரதமர் தஷோ ஷெரிங் டோப்கே (Dasho Tshering Tobgay) மற்றும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் யெசெங் டி தாபா ஆகியோருடனும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அவர் முன்னெடுத்தார். அத்தோடு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளின் சிரேஷ்ட பிரதிநிதிகளுடனும் பிரதமர் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இந்த உத்தியோகபூர்வ பயணத்தின் போது திம்புவில் உள்ள தஷிச்சோ ஸோங் (Tashichho Dzong) விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், அரச ஆடை அருங்காட்சியகம், சிம்டோகா ஸோங் மற்றும் பாரோவிலுள்ள தேசிய அருங்காட்சியகம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
கல்வி, கலாசாரம், சுற்றுச்சூழல், நிலையான அபிவிருத்தி மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும் நட்புறவையும் விரிவுபடுத்துவதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக இந்த விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தனது பயணத்தை நிறைவு செய்த பிரதமர், ரோயல் பூட்டான் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் KB 200 விமானம் மூலம் நாடு திரும்பினார்.
