ரஷ்யாவின் தொலைதூரக் கிழக்குப் பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் (Kamchatka Peninsula) இன்று (வெள்ளிக்கிழமை) 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தரவுகளின்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:35 மணியளவில் ஓஸெர்னோவ்ஸ்கி (Ozernovskiy) நகருக்கு வடகிழக்கே 76 கிலோமீட்டர் தொலைவில், சுமார் 135 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு தாக்கியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி (Petropavlovsk-Kamchatsky), விலியுசின்ஸ்க் மற்றும் எலிசோவ்ஸ்கி உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களால் உணரப்பட்டதாக ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை இல்லை:
நிலநடுக்கம் மிகவும் ஆழமான பகுதியில் ஏற்பட்டதன் காரணமாக, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) உடனடி சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான உயிர்ச்சேதங்களோ அல்லது கட்டிடப் சேதங்களோ ஏற்பட்டதாக உடனடியாக எந்தப் புகாரும் பதிவாகவில்லை.
பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையக்’ (Ring of Fire) பகுதியில் அமைந்திருக்கும் கம்சட்கா தீபகற்பம், அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைக் கொந்தளிப்புகளுக்கு உள்ளாகும் பிராந்தியமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
