Headlines

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம்: ‘சிரிதிய சவிய’ நிதி மோசடி வழக்கில் ஷிராந்திக்கு நிபந்தனைப் பிணை.

சிரிதிய சவிய’ (Siriliya Saviya) அமைப்பின் கணக்கிற்குப் பணம் முறைகேடாக மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மனைவியும், முன்னாள் முதலாம் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்சவை பிணையில் விடுவித்து கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் சந்தேகநபரின் தரப்பு வழக்கறிஞர்களின் சமர்ப்பணங்களை ஆராய்ந்தே கொழும்பு தலைமை நீதிவான் அசாங்க எஸ். போதகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

பைபாஸ் அறுவை சிகிச்சை அவசியமென மருத்துவ அறிக்கை தாக்கல்:

தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து (NSB) ரூ. 10 மில்லியன் நிதி ‘சிரிதிய சவிய’ அமைப்புக்குச் சட்டவிரோதமாக மாற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஷிராந்தி ராஜபக்சவின் உடல்நிலை குறித்துக் கொழும்பு தேசிய மருத்துவமனை நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரின் கடிதத்துடன் குறித்த மருத்துவ அறிக்கை நீதிவான் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உடனடியாக கரோனரி தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை (Coronary Artery Bypass Surgery) செய்யப்பட வேண்டும் என்றும் அந்த மருத்துவ அறிக்கையில் விரிவாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்வதற்காக நீதிமன்ற நடவடிக்கைகள் பிற்பகல் 2.45 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர், உடல்நிலையைக் கருத்திற்கொண்டும், சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை ஆராய்ந்தும் நீதிவான் அவரைப் பிணையில் செல்ல அனுமதித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *