விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு வீட்டிலிருந்து சமைக்கப்பட்ட உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாமல் ராஜபக்ஷவின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளின் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன உறுதிப்படுத்தியுள்ளார். சர்ச்சைக்குரிய எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை கூடத்திலும் அதனைச் சுற்றியும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். அத்துடன், அவரைப் பார்வையிடுவதற்காக ஒரு நாளைக்கு மூவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் நலம் விசாரிப்பதற்காக அவரது தாயாரான ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (07) காலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்தார். அத்தோடு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரான நாமலைப் பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் இன்று காலை சிறைச்சாலைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
