மிலேனியம் சிட்டி (Millennium City) வீடமைப்புத் தொகுதிக்குச் சொந்தமான காணியை அத்துருகிரியவில் மெட்ரோ (Metro) பஸ் தரிப்பிடமாக அனுமதியின்றிப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன மற்றும் கடுவலை மாநகர சபை மேயர் ரஞ்சன் ஜயலால் ஆகியோர் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 100 பேர்ச் விஸ்தீரணமான குறித்த காணியை இந்த பஸ் தரிப்பிடத்திற்காக அத்துமீறிப் பெற்றுக்கொண்டுள்ளதாக வீடமைப்புத் தொகுதியின் நிர்வாகம் செய்த முறைப்பாட்டையடுத்தே இந்த இரண்டு மக்கள் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு 5 நாட்கள் கடந்துள்ள போதிலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவோ அல்லது உண்மைகளை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவோ பொலிஸார் தயக்கம் காட்டுவதாக குறித்த நிறுவனத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன மற்றும் கடுவலை மேயர் ரஞ்சன் ஜயலால் ஆகியோரின் தலைமையில் கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி அத்துருகிரியவில் இந்த மெட்ரோ பஸ் தரிப்பிடம் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. இதற்காக ஒதுக்கப்பட்ட காணி அதற்கு முன்னதாக செப்டம்பர் 26 ஆம் திகதி துப்புரவு செய்யப்பட்டு நிகழ்விற்காகத் தயார்படுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, குறித்த காணி மிலேனியம் சிட்டி வீடமைப்புத் தொகுதிக்குச் சொந்தமானது எனவும், பஸ் தரிப்பிடத்துக்காக அது பலவந்தமாகப் பெறப்பட்டுள்ளதாகவும் அதன் நிர்வாகம் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே எம்.பி அசித்த நிரோஷன மற்றும் மேயர் ரஞ்சன் ஜயலால் ஆகியோர் நேற்றைய தினம் (30) அத்துருகிரிய பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
