Headlines

இலங்கையின் பொருளாதார நிலை “மிகவும் மேம்பட்டுள்ளது”: சர்வதேச நாணய நிதியம் (IMF) அதிரடிப் பாராட்டு!

இலங்கையின் macroeconomic எனப்படும் பெருந்தொளாதார நிலை “மிகவும் மேம்பட்டுள்ளது” என்றும், நாட்டின் நிதி நிலை மிகவும் வலுவாக இருப்பதுடன் கடன் மறுசீரமைப்புப் பணிகளும் பெருமளவில் நிறைவடைந்துள்ளன என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சோனாலி ஜெயின்-சந்திரா இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.

பேங்காக்கில் நடைபெற்ற பன்னாட்டு நிதியத்தின் கூட்டங்களின் போது செய்தியாளர்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். நல்லாட்சி உள்ளிட்ட கட்டமைப்பு விவகாரங்களிலும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு முன்னதாக, நடப்பு மாதத்தின் தொடக்கத்தில் நீடிக்கப்பட்ட நிதியுதவி வசதியின் (Extended Fund Facility) கீழ் ஏழாவது மீளாய்வு தொடர்பாக இலங்கைக்கும் பன்னாட்டு நிதியத்திற்கும் இடையில் ஊழியர் மட்டத்திலான ஒப்பந்தம் எட்டப்பட்டது. இந்த மீளாய்வு நிறைவடைந்தவுடன், தோராயமாக 345 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இணையான சிறப்பு எடுப்பு உரிமைகளை (SDR) இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தம் எதிர்வரும் வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பேரவையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், மார்ச் மாதத்தில் இந்தத் திட்டம் முடிவடைவதற்கு முன்னர் மற்றொரு மீளாய்வுப் பயணமும் மேற்கொள்ளப்படும் என்றும் சோனாலி ஜெயின்-சந்திரா தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தைத் தாண்டி, புதிய நிதியுதவி ஏற்பாடுகள், கண்காணிப்பு வடிவத்திலான கொள்கை ஆலோசனைகள் அல்லது திறன் மேம்பாடு போன்ற பல வழிகளிலும் இலங்கையின் அதிகாரிகளுடன் பன்னாட்டு நிதியம் தொடர்ந்து இணைந்து செயற்படும் என்றும் அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *