Headlines

இளைஞர்களிடையே அதிகரிக்கும் HIV தொற்று: மருத்துவர்கள் எச்சரிக்கை

உலகளவில் புதிய HIV தொற்றுகள் குறைவடைந்து வரும் நிலையில், இலங்கையில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 48 சதவீதத்தால் அதிகரித்துள்ளமை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

1987ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது HIV தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதிலிருந்து, 2026ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு வரை சுமார் 8,111 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் சுமார் 8,700 பேர் HIV தொற்றுடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டில் உலகளாவிய புதிய HIV தொற்றுகள் 42 சதவீதத்தால் குறைவடைந்துள்ள போதிலும், இலங்கையில் 48 சதவீதத்தால் அதிகரித்துள்ளன.

குறிப்பாக 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே தொற்றுகள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக சமூக மருத்துவ நிபுணர் டொக்டர் மாதவி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் மற்றும் போதைப்பொருள் ஊசிகளைப் பகிர்ந்து பயன்படுத்துதல் போன்ற ஆபத்தான நடைமுறைகளைத் தவிர்ப்பதுடன், HIV பரிசோதனைகளை மேற்கொள்வதும் அவசியமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரச பாலியல் சுகாதார நிலையங்கள் அல்லது www.knowforsure.lk இணையத்தளம் ஊடாக HIV பரிசோதனைச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். சுய பரிசோதனைக் கருவிகளை வீடுகளுக்கே பெற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

HIV தொற்றுக்குள்ளானவர்கள் முறையான மருத்துவ சிகிச்சையையும் தினசரி மருந்துகளையும் தொடர்ந்து பெற்றுக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

பரிசோதனை மற்றும் சிகிச்சைச் சேவைகள் இரகசியத்தன்மையுடன் வழங்கப்படுவதால், அச்சமோ தயக்கமோ இன்றி அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *