Headlines

ஈரான் மீது இன்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அதிரடி எச்சரிக்கையால் உச்சக்கட்டப் பதற்றம்!

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில், ஈரான் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாகக் கூறி கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இத்துடன் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல்களை மேற்கொண்ட நிலையில், பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரத் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் இதுவரை எந்தவொரு பலனையும் தரவில்லை. இரு நாடுகளும் தங்களது நிலைப்பாடுகளிலிருந்து பின்வாங்க மறுப்பதால் உடன்பாடு எட்டப்படுவதில் தொடர் சிக்கல் நீடித்து வருகிறது.

டிரம்பின் அதிர்ச்சி எச்சரிக்கையும் ஈரானின் பதிலடியும்:

இந்நிலையில், அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:

“ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஒருவேளை நாளையே (ஞாயிற்றுக்கிழமை) தாக்குதல் நடத்தப்படலாம்; அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேபோல், மிகச் சிறந்த மற்றும் பெரிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ளவும் வாய்ப்புள்ளது. அவர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறார்கள், ஆனால் அந்த ஒப்பந்தத்தை அவர்கள் உறுதியாகக் கடைப்பிடிப்பார்களா என்பதுதான் பிரச்சினை”

எனத் தெரிவித்தார். முன்னதாக, துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பாரக் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, இந்த வார இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் எனக் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டிரம்பின் இந்த எச்சரிக்கைக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், “அமெரிக்கா நெருப்புடன் விளையாட வேண்டாம்” என அதிரடிப் பதிலடி கொடுத்துள்ளது. இதன் காரணமாக வளைகுடா பிராந்தியத்தில் போர்ச் சூழல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதுடன், உலக நாடுகளும் இப்பிராந்தியத்தின் நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *