ஜனாதிபதி செயலகத்தில் இன்று (13) பிற்பகல் கத்தோலிக்க திருச்சபையின் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்க பாடசாலைகளின் நிர்வாகப் பிரச்சினைகள், கத்தோலிக்க சமயக் கல்விக்கான ஆசிரியர் பணியாளர்களை வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் கத்தோலிக்க மதகுருமார், கன்னியாஸ்திரிகள் மற்றும் சகோதரர்களை ஆசிரியர் தொழிலுக்கு நியமிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
மேலும், அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் கத்தோலிக்க பாடசாலைகளின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் கல்வி அமைச்சின் ஆதரவைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் உரையாற்றிய பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, வருடத்தில் மூன்று தடவைகள் கத்தோலிக்க திருச்சபையுடன் கலந்துரையாடல்களை நடாத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமர திசாநாயக்க மற்றும் அரசாங்கத்திற்கு, கத்தோலிக்க திருச்சபை சார்பில் நன்றிகளைத் தெரிவித்தார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் இலங்கையின் கடல்சார் வலயத்திற்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து அரசாங்கம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியதன் அவசியத்தையும் கர்தினால் வலியுறுத்தினார்.
அனைத்து மாணவர்களும் பாரபட்சமின்றி தத்தமது மதங்களைக் கற்கவும் கடைப்பிடிக்கவும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்த அவர், கல்வித்துறையில் தற்போது நிலவும் சவால்களுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இக்கூட்டத்தில் ஆயர்களான ஹெரால்ட் அந்தனி பெரேரா, விமல் சிறி ஜயசூரிய, மெக்ஸ்வெல் சில்வா மற்றும் ஏனைய மதகுருமார்கள் கலந்து கொண்டனர். அத்துடன், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க களுவெவ, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (பாடசாலை விவகாரங்கள்) டபிள்யூ. ஏ. நீலிகா பெரேரா மற்றும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
