Headlines

சட்டத்தின் முன் அனைவரும் சமம்; செல்வாக்குள்ளவர்கள் தப்பிச் செல்லும் காலம் முடிவுக்கு வந்துவிட்டது – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பெருமிதம்.

செல்வாக்குள்ள நபர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்கொள்ளும் அதேவேளை சாதாரண குடிமக்கள் மட்டும் சட்டத்தை எதிர்கொள்ளும் நிலை தற்போது முற்றிலும் முடிவுக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிகவெரட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்ட ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எந்தவொரு நபரும் அல்லது இடமும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“சட்டம் என்பது ஒரு ஒட்டந்தூவலைப் போன்றது என்று ஒரு பழமொழி உண்டு. சில நபர்கள் சட்டம் ஒருபோதும் தன்னை நெருங்காது என்று நம்பினர். சிறிய பூச்சிகள் அந்த வலையில் சிக்குகின்றன, ஆனால் பெரியவை அதைத் தாண்டி தப்பிச் செல்கின்றன.

இந்த நாட்டில் சட்டம் சில நபர்களை அணுக முடியாது என்ற ஒரு கருத்து இருந்தது. சட்டம் அவர்களை நெருங்கும்போது அது எரிக்கப்பட்டுவிடும். அந்த நிலை இப்போது இலங்கையில் முடிவுக்கு வந்துள்ளது. சட்டம் தன்னை எட்ட முடியாது என்று எவரேனும் நம்பியிருந்தால், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பக்கூடிய எந்த இடமும் எந்த நபரும் இல்லை என்பதை நாங்கள் இப்போது நிரூபித்துக் காட்டியுள்ளோம்” என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தற்போதைய சட்ட நடவடிக்கைகள் காரணமாக சிறைச்சாலை தொடர்பான நிகழ்வுகள் ஒரு தனிச் செய்திப் பகுதியாக மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் நகைச்சுவையாகக் கூறினார். “இப்போது நமக்கு சிறைச்சாலைச் செய்திகளுக்கென ஒரு தனிப் பகுதி தேவைப்படுகிறது. ஒரு செய்தி எச்சரிக்கை வருகிறது, பத்தே நிமிடங்களில் அடுத்தது வருகிறது. இந்த முறை யார் என்ற வியப்பும் எழுகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது மத்திய கிழக்கு நிலவரங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி திசாநாயக்க, அரசாங்கம் எந்தவொரு தரப்பினது அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் சுயாதீனமான வெளியுறவுக் கொள்கையைப் பேணி வருவதாகக் குறிப்பிட்டார்.

அமெரிக்கா தனது இராணுவ விமானங்களை இலங்கையில் தரையிறக்க விடுத்த கோரிக்கையையும், ஈரான் தனது போர்க்கப்பல்களை நாட்டுக்குள் அனுப்புமாறு விடுத்த கோரிக்கையையும் அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ஈரானிய கப்பல்கள் தொடர்பான இலங்கையின் இந்தத் துணிச்சலான முடிவுகள் சர்வதேச அளவில் நற்பெயரையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *