சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கையரான சிவரசா அனோஜனுக்கு பொதுமன்னிப்புப் பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளில் தலையிடுமாறு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றுக்கு இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.
நேற்று (23) பிற்பகல் நடைபெற்ற விசேட சந்திப்புகளின் போது, இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குறித்த இலங்கை இளைஞனின் உயிரைக் காப்பாற்ற வலியுறுத்தி, இந்துப் பக்தர்கள் குழுவொன்று நேற்றிரவு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு வெளியே மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை முன்னெடுத்தது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பொரளை பத்தினி தேவாலயத்தின் பிரதம குருவான எஸ். விநாயகன் குருக்கள் கருத்துத் தெரிவிக்கையில், இந்த இளைஞனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை மற்றும் சவூதி அரேபிய அரசாங்கங்கள் உடனடியாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அதேவேளை, அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையிலிருந்து அவரை விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ முயற்சிகளை ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆகியோர் இணைந்து ஆரம்பித்துள்ளனர்.
இந்த முயற்சிகளின் ஒரு கட்டமாக, குறித்த இரு சட்டத்தரணிகளும் நேற்று மாலைதீவுக்குப் பயணம் செய்து, அங்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இலங்கை இளைஞனைக் காப்பாற்ற அவரது தலையீட்டை அவர்கள் கோரியுள்ளனர்.
சவூதி அரேபிய அரசாங்கத்துடன் மாலைதீவு மிகவும் நெருங்கிய மற்றும் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளதாலேயே மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியிடம் இந்த விசேட கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
சிவரசா அனோஜனை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, குறித்த இரு சட்டத்தரணிகளும் எதிர்வரும் நாட்களில் சவூதி அரேபியாவிற்கும் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
