Headlines

22ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு: ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய ஆர்ப்பாட்டம் இன்று பத்தரமுல்லையில்!

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்று (24) காலை பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 9.00 மணிக்கு பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 22ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது நாட்டில் சர்வாதிகாரப் பாதைக்கு வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டுகிறது. இதற்கெதிராகவே இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். மேலும், இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் பொதுமக்களையும் கலந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், ‘ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான சுதந்திர செயற்பாட்டு மையம்’ (Free Action Centre for the Protection of Democracy) இன்றையதினம் திட்டமிடப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் முரண்பாடான சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைத்தையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்து, மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு பரந்த மற்றும் வலுவான மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே தமது பிரதான நோக்கம் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *