Headlines

திமன்ற உத்தரவையும் மீறி அனுராதபுரத்தில் மூன்றாவது நாளாகத் தொடரும் சத்தியாக்கிரகப் போராட்டம்

அனுராதபுரம் ருவன்வெலி மகா சேய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி ஆகிய புனிதத் தலங்களை உள்ளடக்கிய பகுதியிலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (09) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கடந்த நவம்பர் 07ஆம் திகதி காலை இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

ருவன்வெலி மகா சேயவுக்கு அருகிலுள்ள தன்சல் வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் தற்காலிகக் கொட்டகையொன்றை அமைக்க முயன்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, அனுராதபுர தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருந்தார்.

குறித்த அறிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம், ருவன்வெலி மகா சேய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி ஆகியவற்றைச் சூழவுள்ள புனிதப் பகுதியிலிருந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற வேண்டுமென உத்தரவிட்டது.

எனினும், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறாமல் தொடர்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, அனுராதபுர பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (08) இரவு போராட்டம் இடம்பெறும் பகுதிக்குச் சென்று, வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுக்கு மத்தியிலும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *