Headlines

புதிய பயங்கரவாதச் சட்டமூலத்தைத் திருத்துக: இலங்கைக்கு ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தல்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தை (PSTA), சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு அமைவாகத் திருத்துமாறு இலங்கை அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான முயற்சியை வரவேற்றுள்ள அவர்கள், புதிய சட்டமூலத்தின் அண்மைய வரைவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், முக்கியமான சில கவலைகள் தொடர்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு முன்னரும், போரின்போதும், அதன் பின்னரும் சித்திரவதை, வலிந்து காணாமலாக்குதல் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு பழைய சட்டம் வழிவகுத்ததாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிறுபான்மையினர், மனித உரிமைப் பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினருக்கு எதிராகவும் அது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தடுப்புக்காவலுக்கு நீதித்துறைக் கண்காணிப்பு

தடுப்புக்காவல் உத்தரவுகள் தாமதமின்றி, பயனுள்ள நீதித்துறைக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். தடுத்து வைப்பதன் சட்டபூர்வத்தன்மை, அவசியம் மற்றும் அளவுத்தகைமையை ஆராய்ந்து, தேவையானபோது விடுதலைக்கு உத்தரவிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தடுப்புக்காவலுக்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிக்கும் சுயாதீன மீளாய்வுக் குழு, உண்மையான சுதந்திரத்துடன் செயற்பட வேண்டும் என்பதுடன், அதன் தீர்மானங்கள் கட்டுப்படுத்தும் வலுவைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தடுத்து வைக்கப்படுவோருக்கு வழக்கறிஞரை அணுகுதல், மொழிபெயர்ப்பு உதவி, சுயாதீன மருத்துவப் பரிசோதனை, சட்ட உதவி மற்றும் குடும்பத்தினருடனான தொடர்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தாமதமின்றி அவர்களைப் பார்வையிட அனுமதிக்கப்பட வேண்டும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

வலிந்து காணாமலாக்கப்படுதல் மற்றும் வெளித்தொடர்புகளின்றித் தடுத்து வைக்கப்படுதல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக, கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவது முறையாகப் பதிவுசெய்யப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பயங்கரவாத வரையறையை மட்டுப்படுத்த வேண்டும்

மரணம் அல்லது கடுமையான காயத்தை வேண்டுமென்றே ஏற்படுத்தும் செயல்களுக்குள் பயங்கரவாதத்தின் வரையறை மட்டுப்படுத்தப்பட வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சொத்துச் சேதத்தை மட்டும் ஏற்படுத்தும் செயல்கள் அந்த வரையறைக்குள் சேர்க்கப்படக்கூடாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்து வெளிப்பாட்டுடன் தொடர்புடைய செயல்களைக் குற்றமாக்குவதற்கு, அவை பயங்கரவாத வன்முறையைத் தூண்டும் சாத்தியம் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்தகால இராணுவ மனித உரிமை மீறல்களைக் கருத்திற்கொண்டு, கைது செய்தல், விசாரணை நடத்துதல் மற்றும் சோதனையிடுதல் தொடர்பில் ஆயுதப்படையினருக்கு வழங்கப்படும் அதிகாரங்களை நீக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர். பயங்கரவாதக் குற்றங்களைத் தடுப்பதற்கான அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு, நீதித்துறைக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அமைப்புகளைத் தடைசெய்வதற்கான நிபந்தனைகள் தெளிவுபடுத்தப்பட்டு, கடுமையாக்கப்பட வேண்டும். அத்தடைகளுக்குக் காலவரம்பு விதிக்கப்படுவதுடன், கட்டுப்பாட்டு உத்தரவுகள் மற்றும் இடங்களுக்குத் தடை விதிக்கும் அதிகாரங்களுக்கும் மொத்தக் காலவரம்புகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சித்திரவதையால் பெறப்பட்ட சாட்சியங்களை நிராகரிக்க வேண்டும்

சட்டவிரோதமாகவோ, சித்திரவதை அல்லது மோசமான நடத்தையின் மூலமாகவோ பெறப்படும் அனைத்து வாக்குமூலங்களும் சாட்சியங்களும் வழக்கு நடவடிக்கைகளிலிருந்து விலக்கப்பட வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புக் காரணங்களைக் கூறிச் சாட்சியங்களை வெளிப்படுத்தாமல் இருப்பது தொடர்பிலும் உரிய சட்ட நடைமுறைப் பாதுகாப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும். ஊடகவியலாளர்களின் தகவல் மூலங்கள், வழக்கறிஞர்–வாடிக்கையாளர் இரகசியத் தொடர்புகள், தொழில்சார் இரகசியங்கள் மற்றும் மனித உரிமைக் கண்காணிப்புத் தகவல்கள் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் பணிப்புரைகளை வழங்கும் ஜனாதிபதியின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும், புதிய சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் இடைக்கால ஏற்பாடாகக்கூட பழைய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படக்கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகாரிகளுக்குச் சட்ட விலக்குப் பாதுகாப்பு கூடாது

மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராகக் கண்காணிப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் விரைவான நிவாரண வழிமுறைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களைத் தடுப்புக்காவலிலிருந்து விடுவித்தல், சட்டவிரோதமாகப் பெறப்பட்ட சாட்சியங்களை விலக்குதல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுத்தல் ஆகியவை இதில் உள்ளடங்க வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, புனர்வாழ்வு, மன்னிப்புக் கோரல் மற்றும் மீறல்கள் மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதங்களும் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தவறான செயல்களுக்காக அதிகாரிகளுக்குச் சட்ட விலக்குப் பாதுகாப்பு வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிவில் சமூகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்குமாறு கோரியுள்ள நிபுணர்கள், சட்டமூலத்தை மேம்படுத்துவதற்குத் தொழில்நுட்ப உதவி வழங்கவும் முன்வந்துள்ளனர். அரச சார்பற்ற நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலங்கள் குறித்தும் அண்மையில் தமது கரிசனைகளைத் தெரிவித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மனித உரிமைகள் மதிக்கப்படும்போதே பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் பயனுள்ளதாக அமையும் என ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *