Headlines

நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ் அறிவிப்பு; போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்திருத்தங்களுக்கு பச்சைக்கொடி.

நஞ்சுகள், அபின் மற்றும் ஆபத்தான ஔடதங்கள் (Poisons, Opium and Dangerous Drugs Ordinance) கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான இரண்டு சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ் (Dr. Rizvie Salih) நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானங்களை நாடாளுமன்றத்தில் இன்று (09) அறிவித்த பிரதி சபாநாயகர், அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த பின்வரும் இரண்டு சட்டமூலங்களையும் உச்ச நீதிமன்றம் பரிசீலித்ததாகத் தெரிவித்தார்:

  1. 2026 ஆம் ஆண்டின் 79 ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும் ஆபத்தான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் (LDO 8/2026).
  2. 2026 ஆம் ஆண்டின் 80 ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும் ஆபத்தான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் (LDO 11/2026).

79 ஆம் இலக்க சட்டமூலம் தொடர்பான தீர்மானம்:

குழுநிலை விவாதத்தின் போது (Committee Stage), குறிப்பிட்ட சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, 2026 ஆம் ஆண்டின் 79 ஆம் இலக்க சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள 77A(5) பிரிவில் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுதல் மற்றும் தொடர்புடைய அறிக்கைகள் சந்தேகநபரிடம் அல்லது அவரது சட்டத்தரணியிடம் ஒப்படைக்கப்படும் திகதி போன்ற விபரங்களை உள்ளடக்கிய சொற்பதங்களை இந்தத் திருத்தங்களில் சேர்க்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

80 ஆம் இலக்க சட்டமூலம் தொடர்பான தீர்மானம்:

அதேவேளை, 2026 ஆம் ஆண்டின் 80 ஆம் இலக்க சட்டமூலம் அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரண்படவில்லை என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எனவே, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானங்களை அன்றைய தின நாடாளுமன்ற நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ அறிக்கையில் (Hansard) சேர்க்கவும் பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ் பணிப்புரை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *