Headlines

வங்காள விரிகுடாவில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – இலங்கை முழுவதும் மழைக்கு வாய்ப்பு!

இலங்கையின் கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, திருகோணமலையிலிருந்து கிழக்காக சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காற்றழுத்தப் பகுதி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, இலங்கையின் கிழக்குக் கரையிலிருந்து விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், இன்று (15) இந்தக் குறைந்த காற்றழுத்தப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் தாக்கம் காரணமாக இன்று நாடு முழுவதும் மேகமூட்டமான வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் அவ்வப்போது மழை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

பலத்த காற்று மற்றும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிகாலை வேளையில் பனிமூட்டம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளைகளில் சில இடங்களில் பனிமூட்டமான நிலைமை காணப்படக்கூடும்.

இந்த வானிலை நிலைமைகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *