‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்படும் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில், 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களின் பங்கேற்புடன் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று அலரி மாளிகை மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றுள்ளது.
தூய்மையான இலங்கை செயலகத்தினால், அதன் மத்திய குழு உறுப்பினர்களுக்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பிரதி அமைச்சர் ருவன் சேனாரத்ன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சமூக மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் அடிப்படையாக விளங்கும் ‘SEE’ எண்ணக்கரு மற்றும் அதன் நடைமுறைப் பயன்பாடு தொடர்பில் நிகழ்வில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, சமூகத்தில் எதிர்பார்க்கப்படும் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
2027ஆம் ஆண்டுக்கான புதிய திட்டங்கள்
2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், 2027ஆம் ஆண்டு முதல் செயல்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள பல பாரிய திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அவற்றில் முக்கியமான திட்டங்களாகப் பின்வருவன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
- Clean Sri Lanka Green Path – தூய்மையான இலங்கை பசுமைப் பாதை
- Clean Colombo – தூய்மையான கொழும்பு
- Clean Sri Lanka Pure City – தூய்மையான இலங்கை தூய நகரம்
- Clean City – தூய நகரம்
- Clean Sri Lanka Urban Green Parks – தூய்மையான இலங்கை நகர்ப்புற பசுமைப் பூங்காக்கள்
இந்தத் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகள் குறித்து நிகழ்வில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாகாண, மாவட்ட மட்டங்களில் விழிப்புணர்வு
தூய்மையான இலங்கை எண்ணக்கருவை மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக அரச நிர்வாகக் கட்டமைப்பைப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களையும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களையும் வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் அதிகாரிகளுக்குரிய பொறுப்புகள் தொடர்பிலும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்பு
இந்த விசேட நிகழ்வில் தூய்மையான இலங்கை மத்திய குழு உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இவர்களில் சமூக, ஒழுக்கநெறி மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய மூன்று பிரதான தூண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 137 அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டச் செயலகங்களைச் சேர்ந்த 125 பிரதிநிதிகள், பிரதம செயலாளர் அலுவலகங்கள் மற்றும் மாகாண ஆளுநர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 45 அதிகாரிகளும் அடங்குவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
