Headlines

2026 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசை வென்றார் முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளே!

சர்வதேச சட்டத்துறைக்கும் மனித உரிமைகள் பாதுகாப்புக்கும் ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்பிற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் உயர் ஆணையாளரும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் “நவி” பிள்ளே (85) 2026ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசை வென்றுள்ளார். இத்தகவலை நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் நோபல் பரிசுக் குழுவின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃபிரைட்னஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சர்வதேச சட்டத்தின் எல்லையையும் அதன் தாக்கத்தையும் கணிசமாக விரிவுபடுத்தியவர் நவநீதம் பிள்ளே என்று புகழாரம் சூட்டிய நோபல் குழுத் தலைவர், சவால்கள் நிறைந்த காலக்கட்டத்தில் விதிவிலக்கான துணிச்சலுடன் உலகளாவிய நீதி ஒழுங்கை வலுப்படுத்த அவர் வழிநடத்தியதாகக் குறிப்பிட்டார். தென்னாப்பிரிக்காவில் இனவெறி மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கிய நவநீதம் பிள்ளே, உறுதியான தர்ம நெறிமுறையுடன் செயற்பட்டவர் என்றும் பாராட்டப்பட்டார். இவர் 2008 முதல் 2014 வரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராகப் பணியாற்றியுள்ளார்.

இலங்கை விஜயமும் போர்க்குற்ற விசாரணைகளுக்கான அழுத்தமும்: இலங்கையின் உள்நாட்டுப் போர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நவநீதம் பிள்ளே இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கள ஆய்வு நடத்தினார். அப்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் திருகோணமலை உள்ளிட்ட போர் பாதித்த வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் சமூகத்தினரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அந்த விஜயத்தின் முடிவில், இலங்கை சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வதாகவும், நாட்டில் அச்ச சூழல் நிலவுவதாகவும் அவர் எச்சரித்திருந்தார். அத்துடன், தன்னைச் சந்திக்க முயன்ற நபர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். இறுதிக்கட்டப் போரின் போது இரு தரப்பாலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை முதன்முதலில் வலியுறுத்தியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

287 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த ஆண்டின் நோபல் அமைதிப் பரிசுக்கு, சர்வதேச அமைதி மற்றும் நீதித் துறையில் நீண்டகாலம் பணியாற்றிய நவநீதம் பிள்ளே தேர்வு செய்யப்பட்டுள்ளது உலகளவில் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

எமது Facebook பக்கத்தைப் பின்தொடர இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *