நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடனும் தேசபக்தியுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, மாநிலத் தலைநகரங்களில் அந்தந்த மாநில முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றுவது வழக்கமாகும். அந்த வகையில், தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் முதல் முறையாக இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
உற்சாக வரவேற்பு மற்றும் அணிவகுப்பு: இன்று காலை 8.30 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து முதல்வர் விஜய் புறப்பட்டார். மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை வந்ததும், சென்னை காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்களில் முன்னும் பின்னும் அணிவகுத்து அவரைப் பாதுகாப்பாகக் கோட்டைக்கு அழைத்து வந்தனர்.
காலை 8.35 மணியளவில் கோட்டை கொத்தளத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடைக்கு முதல்வர் விஜய் வந்தடைந்தார். தனது பதவியேற்பு விழாவைப் போன்றே, இங்கும் அவர் கருப்பு நிற கோட் சூட் அணிந்து வருகை தந்தார். அவரை தலைமைச் செயலாளர் சாய் குமார் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பிறகு, மேடைக்கு வந்த முதல்வர் விஜய், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்டார்.
முதல் முறையாகக் கொடியேற்றம் மற்றும் உரை: அதன்பிறகு கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதல்வர் விஜய், காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்தினார். தேசியக் கொடி ஏற்றிய பிறகு, முதல்வர் விஜய் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தமிழக அரசின் சாதனைகள், எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்டவைகள் பற்றிப் பேசினார்.
தியாகிகளுக்கான அறிவிப்பு: சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்துவது தொடர்பான முக்கிய அறிவிப்புகளையும் முதல்வர் விஜய் தனது உரையில் வெளியிட்டார். இது தியாகிகளின் குடும்பத்தினரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
விருதுகள் வழங்கல்: சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக, முதல்வர் விஜய் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது மற்றும் காவல்துறையினருக்கான பதக்கங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான கிருஷ்ணசாமிக்கு முதல்வர் விஜய் தகைசால் தமிழர் விருதை வழங்கினார். (கிருஷ்ணசாமி பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணியின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன் விஷ்ணு பிரசாத் தற்போது காங்கிரஸ் கட்சியின் கடலூர் மாவட்ட எம்பியாக இருக்கிறார்.)
மக்களுடன் நடந்து சென்ற முதல்வர்: சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும், முதல்வர் விஜய் காரில் ஏறிப் புறப்பட்டார். அப்போது, மெரினா கடற்கரைச் சாலையில் விழா நிகழ்வுகளைக் காண வந்திருந்த பொதுமக்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர்.
காரில் சென்றவாறே, நடிகை த்ரிஷா, தனது தாய் ஷோபா, தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் அமைச்சர்களுக்குக் கையசைத்துச் சென்றார். அதன் பின்னர், திடீரெனக் காரில் இருந்து இறங்கிய முதல்வர் விஜய், பார்வையாளர்களுக்குக் கையசைத்தவாறு கடற்கரைச் சாலையில் நீண்ட தூரம் நடந்து சென்றார். நீண்ட தூரம் நடந்து சென்று பார்வையாளர்களை நோக்கி கையசைத்தார். இதனால் மக்கள் உற்சாகமடைந்து ஆரவாரம் செய்தனர்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: சுதந்திர தின விழாவையொட்டி தலைநகர் சென்னையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கடற்கரைச் சாலையில் விழா நிகழ்வுகளைக் காண பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பாஸ் இல்லாமல் வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களைத் தீவுத்திடலில் நிறுத்தப் போலீசார் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. சென்னையில், கடந்த இரு தினங்களாகப் போலீசார் உச்சக்கட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தங்கும் விடுதிகளிலும் தீவிர ஆய்வு நடைபெற்றது.
