Headlines

47 வருட கால கொடூரமான PTA சட்டத்திற்கு முற்றுப்புள்ளி: மனித உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

சுமார் 47 வருடங்களாக நாட்டில் அமுலிலிருக்கும் கடுமையான மற்றும் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கி, மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான புதிய சட்டமொன்றை தற்போதைய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளை, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சிறந்த முன்னெடுப்பாக “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்” (Protection of the State from Terrorism Bill) தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த புதிய சட்டமூலமானது, பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதுடன், சந்தேக நபர்களைக் கண்டறிதல், கைது செய்தல், தடுத்து வைத்தல் மற்றும் விசாரித்தல் ஆகியவற்றுக்கான புதிய மற்றும் நியாயமான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாதுகாக்கப்படும் ஜனநாயக உரிமைகள் தற்போதைய அரசாங்கத்தின் இந்த புதிய சட்டமூலத்தில், ஜனநாயக உரிமைகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அமைதிப் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள், அரசியல் கருத்து வெளிப்பாடுகள், மனித உரிமைச் செயற்பாடுகள் மற்றும் மனிதாபிமான சேவைகள் ஆகியவற்றை எக்காரணம் கொண்டும் பயங்கரவாதச் செயல்களாகக் கருத முடியாது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஊடக சுதந்திரத்திற்கும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் நியாயமான செய்தி அறிக்கையிடல், பகுப்பாய்வுகள், கல்விசார் ஆராய்ச்சிகள் மற்றும் பொதுநலத் தகவல்தொடர்புகள் ஆகியவை இந்தச் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கருதப்பட மாட்டாது.

பயங்கரவாதத்தின் புதிய வரையறைகள் இந்தச் சட்டமூலத்தின் கீழ் பயங்கரவாதம் என்பதற்கான வரையறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்குதல், அரசாங்கத்தை அச்சுறுத்துதல், மரணம் அல்லது கடுமையான காயங்களை ஏற்படுத்துதல், பணயக்கைதிகளாகப் பிடித்தல், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் இணையவழித் தாக்குதல்கள் (Cyberattacks) ஆகியன பயங்கரவாதக் குற்றங்களாகக் கருதப்படும். அத்துடன், இலங்கையின் இணையக் கட்டமைப்பு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கலாச்சார மரபுகள் ஆகியனவும் இச்சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் துறைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன.

தண்டனைகள் மற்றும் புதிய கட்டுப்பாடுகள் பயங்கரவாதச் செயல்களின் மூலம் மரணத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ஏனைய பாரிய பயங்கரவாதக் குற்றங்களுக்கு 20 வருடங்கள் வரையான கடூழியச் சிறைத்தண்டனையுடன் 20 மில்லியன் ரூபா வரையான அபராதமும் விதிக்கப்படும். தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் உறுப்பினராக இருத்தல், நிதியளித்தல், பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்குதல் ஆகியனவும் குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நம்பப்படும் அமைப்புகளைத் தடைசெய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கைது மற்றும் தடுத்து வைப்பு விதிகளில் மாற்றம் சந்தேக நபர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பல புதிய சரத்துகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒருவரைக் கைது செய்யும்போது அதற்கான காரணம், கைது செய்யும் அதிகாரியின் அடையாளம் மற்றும் சட்டத்தரணியை அணுகுவதற்கான உரிமை ஆகியன சந்தேக நபருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

கைது செய்யப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் சந்தேக நபர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். தடுத்து வைப்பு உத்தரவு ஒரு தடவையில் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே பிறப்பிக்கப்படும். இரண்டு மாதங்களுக்கு மேல் தடுத்து வைக்க உயர் நீதிமன்றத்தின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டுமொத்த தடுத்து வைப்புக் காலம் ஒரு வருடத்தைத் தாண்டக் கூடாது என்ற சிறப்பான கட்டுப்பாடும் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், தடுத்து வைப்பு உத்தரவுகளை மீளாய்வு செய்வதற்காக, முன்னாள் உயர் நீதிமன்ற அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் சுயாதீன மீளாய்வுக் குழுவொன்றை (Independent Review Committee) நிறுவுவதற்கும் இந்தச் சட்டமூலம் பரிந்துரைக்கிறது. மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தல், சித்திரவதைகளைத் தடுத்தல் போன்ற ஜனநாயகப் பாதுகாப்புகளையும் அரசாங்கம் இதில் உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *