Headlines

அரோகரா முழக்கத்தில் திருவண்ணாமலை: இன்று மாலை மகா தீபம்!

தமிழர்களின் தொன்மையான ஆன்மிக மரபையும் இறை நம்பிக்கையையும் பறைசாற்றும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயரமுடைய அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படவுள்ளது.

முன்னதாக இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என முழக்கமிட்டு பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

மகா தீபத்தின் ஆன்மிகச் சிறப்பு

பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபம், இறைவன் ஒளி வடிவில் விளங்குவதைக் குறிக்கும் ஆன்மிக அடையாளமாகப் போற்றப்படுகிறது.

‘ஏகன் அநேகன்’ என்ற தத்துவத்தை உணர்த்தும் பரணி தீபமும், மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபமும் கார்த்திகைத் திருவிழாவின் தனிச்சிறப்புகளாக விளங்குகின்றன.

1,000 மீற்றர் துணியில் மகா தீபம்

கடந்த நவம்பர் 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான கார்த்திகை தீபத் திருவிழாவில் மகா தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

மகா தீபத்திற்குப் பயன்படுத்தப்படும் 1,000 மீற்றர் காடாத் துணி மாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, சம்பந்த விநாயகர் சந்நிதியில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் தீபக் கொப்பரையும் திரியும் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டன.

15,500 பொலிஸார் பாதுகாப்புப் பணியில்

மகா தீப நிகழ்வில் 8,500 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. அத்துடன் உள்ளூர் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 3,000 பக்தர்களுக்கு இலவச தரிசன அனுமதிச் சீட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.

பக்தர்களின் வருகையைக் கருத்திற்கொண்டு திருவண்ணாமலை நகரிலும் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 15,500 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கார்த்திகை மகா தீபம் என்பது வெறுமனே மலை உச்சியில் ஏற்றப்படும் தீபமல்ல. அறியாமை என்னும் இருள் அகன்று, ஞானமும் நம்பிக்கையும் மனித வாழ்வில் ஒளிர வேண்டும் என்ற ஆன்மிகத் தத்துவத்தின் வெளிப்பாடாகவும் பக்தர்களால் கருதப்படுகிறது.

உலகெங்கும் வாழும் சைவப் பெருமக்களின் கவனம் இன்று திருவண்ணாமலையை நோக்கித் திரும்பியுள்ளது.

அண்ணாமலையாருக்கு அரோகரா!

— தமிழ்முரசு ஆசிரியர் பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *