சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓ. எல். அமீர் அஜ்வத், ரியாத்தில் இருந்து சுமார் 450 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுப்புக்காவலிலுள்ள அனோஜன் சிவராசாவை 2026 அக்டோபர் 8 ஆம் திகதி நேரில் சென்று சந்தித்தார்.
அவரது நலன் குறித்து விசாரிப்பதற்கும் தற்போதைய நிலையை கண்டறிவதற்கும் இந்த விஜயம் அமைந்தது. இச்சந்திப்பின் போது, தூதுவர் அனோஜன் சிவராசாவுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார். அவரது தேவைகள் மற்றும் கவலைகளைக் கேட்டறிந்த தூதுவர், இலங்கை வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து விதமான தூதரக மற்றும் சட்ட உதவிகளை வழங்குவதற்கான தூதரகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
நேரடி தொடர்புகளை எளிதாக்கும் பொருட்டு தூதுவர் தனது தொடர்பு விபரங்களையும் அனோஜன் சிவராசாவிற்கு வழங்கினார் என ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பிற்கு பின்னர், அனோஜன் சிவராசா நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், சவூதி சிறை அதிகாரிகள் அவரது நலனை கவனித்து வருவதாகவும் தூதுவர் உறுதிப்படுத்தினார்.
தூதுவர் அமீர் அஜ்வத், தம்மாம் மத்திய சிறைச்சாலையின் பணிப்பாளர் மற்றும் சிறை மருத்துவ அதிகாரியையும் சந்தித்து, இந்த விஜயத்தை எளிதாக்கியதற்கும் அனோஜன் சிவராசாவின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
அனோஜன் சிவராசாவின் உச்ச நீதிமன்ற மேன்முறையீட்டிற்கும் இலங்கை தூதரகம் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
