Headlines

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்: பிரதமர் ஹரினி அமரசூரிய அறிவிப்பு.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான பல முன்மொழிவுகள் மற்றும் கொள்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் கடந்த 09 ஆம் திகதி கல்வி அமைச்சின் தன்னார்வ ஆலோசனைக் குழுவுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார் என பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் கூறியதாவது:

“கல்வி முறையில் குறிப்பிடத்தக்க தரமான மற்றும் கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட பல முக்கிய கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான கருத்துப் பத்திரம், தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பு மற்றும் 1 முதல் 11 ஆம் தரங்களுக்கான மாணவர் மதிப்பீட்டுக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. க.பொ.த உயர்தரத்திற்கான மதிப்பீட்டுக் கட்டமைப்பு தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

கல்விச் சபை ஒன்றை நிறுவுவது தொடர்பான அறிக்கைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு தேவையான் குழுவை கல்வி அமைச்சு வெகுவிரைவில் நியமிக்கும்.

மேலும், கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கும் கொள்கை தேசிய கல்வி ஆணைக்குழுவின் ஒப்புதலின் பின்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது உரிய நேரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பாடசாலைக் கல்வியில் டிஜிட்டல் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக ஐந்து வருடங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 96 பில்லியன் ரூபா திட்டத்திற்கும் கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்துள்ளது.

அரசு மற்றும் அரச சார்பற்ற கல்வித் துறைகளில் தர உறுதிப்பாட்டு செயல்முறையை வலுப்படுத்த ஒரு துணைக் குழு நிறுவப்பட்டுள்ளது.

கூடுதலாக, க.பொ.த உயர்தரப் பரீட்சையை முடிக்கும் மாணவர்கள் அனைத்து உயர்கல்வி வாய்ப்புகளுக்கும் ஒரே முறைமையின் கீழ் விண்ணப்பிக்க வகை செய்யும் ‘ சேர்க்கைக் கொள்கையை’ (Unified Admissions Policy) உருவாக்குமாறு பல்கலைக்கழக ஆணைக்குழு மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் (NCOEs) மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்குத் தனித்தனியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய தேவையினால் ஏற்படும் நிர்வாகச் சிரமங்களைத் தீர்ப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முறைமை 2028 ஆம் ஆண்டு முதல் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று பிரதமர் தெரிவித்தார்.

கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன பேசுகையில், உயர்கல்வியினுள் பொறியியல், மருத்துவக் கல்வி மற்றும் விவசாயத் துறைக்கான கொள்கைகளை வகுக்க விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன், அரச சார்பற்ற பட்டங்களை வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் பட்டங்களை வழங்கும் அந்தஸ்தை வழங்குவதற்கான அளவுகோல்களை நிறுவுவதற்குமான புதிய கொள்கைக்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள், 1–2, 3–5, 6–7, 8–10 மற்றும் 11–13 ஆகிய ஐந்து தரக் குழுக்களை உள்ளடக்கிய மாணவர்களின் ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நலனை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக வெளிப்படுத்தினர். முன்னோடித் திட்டம் நவம்பரில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முழுமையான அமலாக்கம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறையைத் தொழில்துறைத் தேவைகள் மற்றும் தொழிலாளர் சந்தை தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்குவதற்கும் புதுப்பிப்பதற்குமான நான்கு அம்ச மூலோபாயத் திட்டம் குறித்தும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், ஆசிரியர் இடமாற்றங்கள், மாணவர்களுக்கான சுகாதார வசதிகள், விளையாட்டு மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட கல்வித் துறை சார்ந்த பல முக்கிய விடயங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *